ஒலிம்பிக் ஜோதி விவகாரம்; இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா

சீனாவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் ஜோதியை, அந்நாட்டு ராணுவத்தின் சின்ஜியாங் படை தளபதி குய் ஃபபாவோ ஏந்தி சென்றார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் 2020, ஜூன் 15ஆம் தேதி, இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா். சீன தரப்பில் நான்கு வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.

இந்த சம்பவம், இருநாடுகளுக்கிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் உலக நாடுகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் பின்னர், இரு தரப்பும் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்னையை தீர்க்க முற்பட்டுவருகிறது. இதற்கு மத்தியில், சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளதால் அங்கு அதற்கான ஒலிம்பிக் ஜோதி வந்தடைந்தது. 

ஆனால், கல்வான் மோதலில் போரிட்டு படுகாயம் அடைந்த சீன ராணுவ அதிகாரியை, அந்த ஜோதியை பெற்றுகொண்டு ஏந்தி சென்றது உலக நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, இது வெட்கக்கேடான சம்பவம் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு கமிட்டி உறுப்பினர் ஜிம் ரிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "2020ல் இந்தியாவைத் தாக்கி உய்குர் இன மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை நடைமுறைப்படுத்திய ராணுவ படையின் தளபதியை பெய்ஜிங் 2022 ஒலிம்பிக் ஜோதியை ஏந்த தேர்ந்தெடுத்தது வெட்கக்கேடானது. உய்குர் இன மக்களின் சுதந்திரம் மற்றும் இந்தியாவின் இறையாண்மைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும்" என பதிவிட்டுள்ளார்.

சீனாவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் ஜோதியை, ஒலிம்பிக்கில் ஷார்ட் டிராக் ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் சீனாவுக்காக நான்கு முறை பதக்கம் வென்ற வாங் மெங் முதல் ஏந்தி சென்றார். பின்னர், அவரிடமிருந்து சீன ராணுவத்தின் சின்ஜியாங் படை தளபதி பெற்று கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com