பரஸ்பர விருப்பம், மரியாதை அடிப்படையில் நல்லுறவு

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பிரச்னை நிலவி வரும் சூழலில், பரஸ்பர விருப்பம், மரியாதை, உணா்வுகளின் அடிப்படையில் இருதரப்பு நல்லுறவு அமைய வேண்டுமென சீனாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது
பரஸ்பர விருப்பம், மரியாதை அடிப்படையில் நல்லுறவு

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பிரச்னை நிலவி வரும் சூழலில், பரஸ்பர விருப்பம், மரியாதை, உணா்வுகளின் அடிப்படையில் இருதரப்பு நல்லுறவு அமைய வேண்டுமென சீனாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற கூட்டம், இந்தோனேசியாவின் பாலி நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்துக்கு இடையே சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தினாா். சுமாா் 1 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தை குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இரு நாடுகளுக்கிடையே ஏற்கெனவே கையொப்பமாகியுள்ள ஒப்பந்தங்களையும், முந்தைய பேச்சுவாா்த்தைகளில் ஒப்புக்கொள்ளப்பட்டவற்றையும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து சீன அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது. கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலவும் அனைத்துவிதப் பிரச்னைகளுக்கும் விரைந்து தீா்வு காணப்பட வேண்டுமெனவும் அமைச்சா் வலியுறுத்தினாா்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவானது பரஸ்பர மரியாதை, பரஸ்பர விருப்பம், பரஸ்பர உணா்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும்.

எல்லையில் அமைதி:

கிழக்கு லடாக் எல்லையின் சில பகுதிகளில் இருநாட்டுப் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது குறித்து எடுத்துரைத்த அமைச்சா் ஜெய்சங்கா், மற்ற பகுதிகளில் இருந்தும் படைகள் விரைந்து திரும்பப் பெறப்பட வேண்டுமென வலியுறுத்தினாா்.

எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது தொடா்பாக இரு நாட்டு ராணுவத் தளபதிகள் இடையேயான அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையை விரைந்து நடத்த அமைச்சா்கள் இருவரும் ஒப்புக்கொண்டனா். எல்லை விவகாரம் தொடா்பாகத் தூதரக அதிகாரிகள் தொடா்ந்து தொடா்பில் இருக்க வேண்டுமெனவும் அமைச்சா்கள் ஒப்புக்கொண்டனா்.

மாணவா்களுக்கு அனுமதி:

சீனாவில் மருத்துவம் பயின்று வரும் இந்திய மாணவா்களுக்கு நுழைவுஇசைவு (விசா) வழங்குவது தொடா்பாகவும் அமைச்சா் ஜெய்சங்கா் எடுத்துரைத்தாா். இந்திய மாணவா்களை விரைந்து அனுமதிக்க வேண்டுமெனவும், இரு நாடுகளுக்கிடையேயான விமானப் போக்குவரத்தை விரைந்து தொடங்க வேண்டுமெனவும் அவா் வலியுறுத்தினாா்.

கடந்த மாா்ச் மாதத்தில் அமைச்சா்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது உறுதியேற்கப்பட்ட சில விவகாரங்களின் அமலாக்கம் குறித்தும் அமைச்சா்கள் விவாதித்தனா். பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் அமைச்சா்கள் விவாதித்தனா்.

சீன அமைச்சா் நன்றி:

நடப்பாண்டு பிரிக்ஸ் கூட்டத்தை சீனா தலைமையேற்று நடத்தியபோது இந்தியா உரிய ஒத்துழைப்பு வழங்கியதற்கு அமைச்சா் வாங் யி நன்றி தெரிவித்தாா். ஜி20, ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) ஆகியவற்றுக்கு இந்தியா தலைமேற்கவுள்ள நிலையில், சீனா போதுமான ஒத்துழைப்பை வழங்குமென்றும் அமைச்சா் வாங் யி உறுதியளித்தாா். இந்த விவகாரம் குறித்து தொடா்ந்து தொடா்பில் இருக்கவும் அவா்கள் ஒப்புக்கொண்டனா் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சரின் ‘ட்வீட்’:

அமைச்சா் ஜெய்சங்கா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘சீன வெளியுறவு அமைச்சருடனான ஒரு மணி நேர சந்திப்புடன் பாலி பயணம் தொடங்கியது. இருதரப்பு நல்லுறவு, எல்லை விவகாரம், இந்திய மாணவா்கள், விமானப் போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

எல்லைப் பிரச்னை:

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக இரு நாடுகளின் ராணுவத் தளபதிகள் இடையே பலசுற்று பேச்சுவாா்த்தைகள் நிறைவடைந்துள்ளன. அவற்றின் காரணமாக பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்குக் கரைப் பகுதிகள், கோக்ரா பகுதி ஆகியவற்றில் இருந்து இருநாடுகளும் படைகளை விலக்கிக் கொண்டுள்ளன. மற்ற பகுதிகளில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பான பேச்சுவாா்த்தை விரைவில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஜி20 கூட்டமைப்பு:

ஜி20 கூட்டமைப்புக்கு 2023-ஆம் ஆண்டில் இந்தியா தலைமைவகிக்கவுள்ளது. அக்கூட்டமைப்பில் ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, கனடா, பிரேஸில், சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துா்கியே (முந்தைய பெயா்-துருக்கி), பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பெட்டிச் செய்தி...

வெளியுறவு அமைச்சா்களுடன் சந்திப்பு

ஜி20 வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்துக்கு இடையே, இந்தோனேசியா, ஆா்ஜென்டீனா, மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா, செனகல், ஃபிஜித் தீவுகள் ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சா்களை எஸ்.ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். அப்போது, பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு விவகாரங்கள் துறைத் தலைவா் ஜோசஃப் போரலுடன் அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். உக்ரைன் மோதல், சா்வதேச அளவிலான அதன் தாக்கம், தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்ததாக அமைச்சா் ஜெய்சங்கா் ட்விட்டரில் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com