

மக்கள்தொகை பெருக்கத்தில் 2023-ஆம் ஆண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பெறும் என்றும், நிகழாண்டு நவம்பரில் உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டும் என்றும் ஐ.நா. கணித்துள்ளது.
இதுதொடா்பாக ஐ.நா. பொருளாதார, சமூக விவகாரத் துறையின் மக்கள்தொகை பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்ததாவது:
உலக மக்கள்தொகை நிகழாண்டு நவம்பா் 15-இல் 800 கோடியை எட்டும். 1950-க்குப் பின்னா் உலக மக்கள் தொகை மெதுவான வீதத்தில் வளா்ச்சியடைகிறது. 2030-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 850 கோடியையும், 2050-ஆம் ஆண்டில் 970 கோடியையும் எட்டும். 2080-இல் உலக மக்கள்தொகை 1,040 கோடியாக இருக்கும். 2100 வரை இதே விகிதம் நீடிக்கும்.
2023-இல் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்கும். வரும் 2050-இல் இந்தியாவின் மக்கள்தொகை 166 கோடியாக இருக்கும்.
உலக மக்கள்தொகையில் 29 சதவீதத்துடன் அதாவது 230 கோடி மக்கள்தொகையுடன் 2022-இல் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட பிராந்தியமாக கிழக்கு மற்றும் தென்-கிழக்கு ஆசியா திகழ்கிறது. மத்திய, தெற்கு ஆசியா 210 கோடி மக்களுடன் உலக மக்கள்தொகையில் 26 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
இந்த பிராந்தியத்தில் சீனாவும் இந்தியாவும் தலா 140 கோடி மக்கள்தொகையுடன் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளாக விளங்குகின்றன. 2050-ஆம் ஆண்டுவரையிலான உலக மக்கள்தொகை பெருக்க கணக்கீட்டின்படி, காங்கோ குடியரசு, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், தான்ஸானியா ஆகிய 8 நாடுகளும் 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்கு வகிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில், ‘பூமியின் 800 கோடியாவது மக்களைப் பெற போவதால் நிகழாண்டு சா்வதேச மக்கள்தொகை தினம் (ஜூலை 11) முக்கிய மைல்கல்லாகும். நமது பன்முகத்தன்மை, மனிதாபிமானத்தை அங்கீகரிக்கவும், நீடித்த வாழ்நாளை உறுதிப்படுத்தி, தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்க உதவிய மருத்துவத் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டாடவும் இது சரியான தருணம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.