என்ன நடக்கிறது பாகிஸ்தானில்? அடுத்த இலங்கையாகும் அபாயம்

பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு இன்று கடும் சரிவடைந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான ஒரு பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 230 ஆக சரிந்துள்ளது.
அடுத்த இலங்கையாகுமா பாகிஸ்தான்?
அடுத்த இலங்கையாகுமா பாகிஸ்தான்?
Published on
Updated on
1 min read


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு இன்று கடும் சரிவடைந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான ஒரு பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 230 ஆக சரிந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பொதுத் துறை வங்கியான எஸ்பிபீ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இன்றைய நாள் வர்த்தகத்தின்போது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு, 230 ஆக சரிந்தது. இது இதற்கு முன்பு 228.37 ஆக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலுத்த வேண்டிய தொகைகளுக்கு பாகிஸ்தானிலிருந்து அதிகளவில் டாலர் வெளியேறுவது, பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வர்த்தகத்தில் இவ்வாறு பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து வருவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இதற்கிடையே, பாகிஸ்தானின் லாகூர் நகரில், அறுவை சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் மயக்க மருந்து போதிய அளவுக்கு கையிருப்பில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் நூற்றுக்கணக்கான அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டு, நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் போதிய அளவுக்கு மயக்க மருந்து இல்லாமல் இருப்பது, சுகாதாரத்துறையின் மெத்தனப் போக்கையே காட்டுவதாக அந்நாட்டு ஊடகங்கள் கடுமையான விமரிசனத்தை முன் வைத்துள்ளன.

அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருக்கும் நிலையில், வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள், முக்கியமான மருந்து பொருள்கள் விநியோகத்தை நிறுத்தி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் அரசுடன் இது குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகே உரிய மருந்துகள் விநியோகம் தொடங்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் சுகாதார செயலாளர் அலி ஜான் கூறுகையில், இதனை அரசின் விவகாரமாக்க வேண்டாம், அனைத்து மருத்துவ மையங்களும் சொந்த ஏற்பாட்டின் பேரில் மருந்துகளை வரவழைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் பண மதிப்பு வீழ்ச்சி, மருந்து தட்டுப்பாடு என ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையை நினைவுபடுத்துவதாகவே பாகிஸ்தான் நிலைமையும் மாறி வருவதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com