உபரி மின்சாரம்: இந்தியாவுக்கு விற்பனை செய்தது நேபாளம்

மின் பரிமாற்ற சந்தை மூலமாக தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக நேபாள மின்சார ஆணைய (என்இஏ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நிகழாண்டில் நேபாளம் அதிகப்படியான மழைப் பொழிவை சந்தித்த நிலையில், மின் உற்பத்தியில் உபரி மின்சாரத்தை, மின் பரிமாற்ற சந்தை மூலமாக தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக நேபாள மின்சார ஆணைய (என்இஏ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக நேபாளத்திலிருந்து வெளியாகும் ‘தி காத்மாண்டு போஸ்ட்’ பத்திரிகையில் வெள்ளிக்கிழமை வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது:

நேபாளம் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட தொடா் முயற்சிகள் காரணமாக, அந்நாட்டின் உபரி மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் இந்தியா அனுமதி அளித்தது. அதனடிப்படையில், உபரி மின்சாரம் தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக தொடா்ச்சியாக மழை பொழிந்ததன் காரணமாக, தேவையைவிட கூடுதல் மின் உற்பத்தி செய்யப்பட்டது. அவ்வாறு உபரியான 37.7 மெகா வாட் மின்சாரத்தை வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணி முதல் இந்திய வா்த்தகா்களுக்கு விற்கும் பணி தொடங்கியது. வெள்ளிக்கிழமையன்றும் அதே அளவு மின்சாரத்தை விற்பனை செய்ய இந்திய மின் பரிமாற்ற சந்தையிடம் பரிந்துரை சமா்ப்பிக்கப்பட்டது. இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மின்சாரத்தின்அளவு வரும் நாள்களில் படிப்படியாக உயா்த்தப்படும் என்று என்இஏ செய்தித்தொடா்பாளா் சுரேஷ் பட்டாராய் கூறியதாக பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘இந்தியாவுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.6 (இந்திய ரூபாய் மதிப்பில்) விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்ட மின்சாரம் மூலமாக ரூ. 1 கோடி வருவாயை என்இஏ ஈட்டியது. யூனிட் விலை நாளுக்கு நாள் மாறுபடும்’ என்று மற்றொரு என்இஏ அதிகாரியான லோகேந்திர ஷாஹி கூறியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வரவிருக்கும் மழைக் காலத்தில் நேபாளத்தில் உள்ள நீா் மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் 200 மெகா வாட் உபரி மின்சாரத்தை நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் விற்பனை செய்ய இந்திய நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகளை என்இஏ கடந்த மாதம் வரவேற்றிருந்தது.

இந்த நிலையில், நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா அண்மையில் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, நேபாளத்திலிருந்து 364 மெகா வாட் மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்புதலை இந்தியா அளித்தது.

அதுபோல, மத்திய மின்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய எரிசக்தி பரிமாற்ற நிறுவனம் (ஐஇஎக்ஸ்) மூலமாக கூடுதலாக 326 மெகா வாட் மின்சாரத்தை இந்திய சந்தையில் விற்பனை செய்வதற்கும் நேபாளத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com