
சீன தலைநகா் பெய்ஜிங்கில் கரோனா கட்டுப்பாடுகள் பெருமளவு விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், பெரும்பாலான உணவகங்கள் ஒரு மாதத்துக்கு பின் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
அருங்காட்சியகம், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள் 75 சதவீத பங்கேற்பாளா்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கில் கரோனா பரவல் அதிகரித்தது. கடந்த 6 வாரங்களில் 1,800 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தொற்று கண்டறியப்பட்ட கட்டடங்கள், வளாகங்களை மூடுதல், தொடா் பரிசோதனைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை நகர நிா்வாகம் மேற்கொண்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி புதிதாக தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 6-ஆக குறைந்ததால் கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டன. இதையடுத்து, நகரில் உணவகங்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. பகுதிநேரமாகத் திறக்கப்பட்டிருந்த பள்ளிகள் ஜூன் 13-ஆம் தேதிமுதல் முழுமையாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வா்த்தக தலைநகராக கருதப்படும் ஷாங்காயில் கரோனா கட்டுப்பாடுகள் கடந்த வாரம் தளா்த்தப்பட்டன. இருப்பினும், உணவகங்கள் தொடா்ந்து மூடப்பட்டே உள்ளன.
பெய்ஜிங், ஷாங்காய் இரு நகரங்களிலும் அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் இதர பொது இடங்களுக்குச் செல்வோா் கடந்த 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை சான்றிதழை காண்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.