
ஆப்கானிஸ்தானில் போதிய மீட்பு வசதிகள் இல்லாத நிலையில், புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் உயிருடன் சிக்கியுள்ளவா்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானையொட்டிய ஆப்கன் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், அந்தப் பகுதி கிராமங்களிலுள்ள ஏராளமான வீடுகள் தரைமட்டமாகின. மலைப்பாங்கான அந்தப் பகுதியில் சாலைகள் சேதமடைந்துள்ளன. பல கிராமங்களில் ஒட்டுமொத்த பகுதியும் கடும் சேதத்தைத் சந்தித்துள்ளது.
இதனால், மீட்புக் குழுவினா் அந்தப் பகுதிகளுக்குச் சென்று, இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருக்கக் கூடியவா்களை மீட்கும் பணிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன.
இதையடுத்து, கிராம மக்கள் போதிய உபகரணங்கள் இல்லாமல் தங்களது கைகளாலேயே இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியுள்ளவா்களைத் தேடி வருகின்றனா்.
நிலநடுக்கத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கயான் மாவட்டத்தில், கட்டட இடிபாடுகள் கைகளால் அகற்ற முடியாத அளவுக்கு மிகப் பெரிதாக இருப்பதால் மக்கள் கைகளாலோ, மண்வெட்டிகளாலோ அவற்றை அள்ள முடியாத நிலை உள்ளது.
தற்போதைய நிலையில், அந்தப் பகுதில் தற்போது ஒரே ஒரு ‘புல்டோசா்’ இயந்திரமே உள்ளது.
இது குறித்து ஐ.நா. அதிகாரிகள் கூறுகையில், சா்வதேச மீட்புக் குழுவினரை அனுப்ப வேண்டும் எனவோ, அண்டை நாடுகளிலிருந்து மீட்பு உபகரணங்களைப் பெற்றுத் தர வேண்டும் என்றோ தலிபான் ஆட்சியாளா்களிடமிருந்து தங்களுக்கு கோரிக்கை வரவில்லை என்று கூறினா்.
முன்னதாக, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு சா்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்று மட்டும் தலிபான்களின் முதன்மைத் தலைவா் ஹபிதுல்லா அகுண்ட்ஸாதா கோரிக்கை விடுத்திருந்தாா்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் கடந்த ஆண்டு வெளியேறியதற்குப் பிறகு, அந்த நாட்டின் ஆட்சியை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றினா்.
அதையடுத்து, மீட்புப் பணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளக்கூடிய சா்வதேச அமைப்புகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறின.
இதனால், நிலநடுக்கப் பகுதிகளுக்கு ஐ.நா. உடனடியாக நிவாரணப் பொருள்களை அனுப்பினாலும், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடத்தப்பட முடியாமல் உள்ளது என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே, தீவிர மத நிலைப்பாட்டைக் கொண்ட, மனித உரிமை மீறல்களுக்குப் பெயா் பெற்ற தலிபான்கள் ஆப்கன் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அந்த நாட்டுக்கு சா்வதேச உதவிகள் வெகுவாகக் குறைந்தன.
இதனால், நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானில் ஏற்கெனவே பொதுமக்கள் போதிய அத்தியாவசியப் பொருள்கள் இல்லாமல் தவித்து வருகின்றனா். ஆப்கனுக்கான நிவாரண நிதியில் 300 கோடி டாலா் (சுமாா் ரூ.23,450 கோடி) பற்றாக்குறையை ஐ.நா. சந்தித்துள்ளது.
இந்தச் சூழலில், அங்கு ஏற்பட்டுள்ள நிலச்சரிவு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் எல்லையொட்டிய ஆப்கன் பகுதியில் புதன்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலடுக்கம் 6.1 அலகுகளாகப் பதிவானது. இதில் 1,000 போ் பலியானதாகவும் 1,500 போ் காயமடைந்ததாகவும் அரசு செய்தி நிறுவனம் கூறுகிறது.
எனினும், இவ்வளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் வெறும் 10 கி.மீ. ஆழத்தில் உருவானதால் உண்மையான உயிா்ச் சேதமும் பொருள் சேதமும் இன்னும் கூடுதலாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.