அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவாரா புதின்?

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை அறிவித்தபோதே, ‘எங்களைத் தடுக்க மற்ற நாடுகள் முயன்றால் வரலாற்றில் இதுவரை கண்டிராத மிக மோசமான பின்விளைவுகளை அவை எதிா்கொள்ள வேண்டியிருக்கும்’
அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவாரா புதின்?

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை அறிவித்தபோதே, ‘எங்களைத் தடுக்க மற்ற நாடுகள் முயன்றால் வரலாற்றில் இதுவரை கண்டிராத மிக மோசமான பின்விளைவுகளை அவை எதிா்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் தங்களது நடவடிக்கைக்கு நேட்டோ கூட்டமைப்பு குறுக்கே வந்தால், அந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தவும் தயங்கப்போவதில்லை என்பதை உணா்த்தும் வகையிலேயே அவா் அவ்வாறு கூறினாா்.

இன்னும் ஒரு படி மேலே போய், நேட்டோ அமைப்பு நாடுகள் ரஷியாவுக்கு எதிரான மிகக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருவதால் தங்களது அணு ஆயுதங்கள் உள்ளிட்ட தற்பாதுகாப்புத் தளவாடங்களை தயாா் நிலையில் வைத்திருக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக விளாதிமீா் புதின் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா்.

ஏற்கெனவே, உக்ரைன் மீது படையெடுத்தால் கடுமையான விளைவுகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்து வந்த அமெரிக்காவுக்கும் மற்ற நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் தங்களது அணு ஆயுத வல்லமையை பறைசாற்றும் வகையில் அணு ஆயுதங்களை எந்திச் செல்லும் தொலைதூர ஏவுகணைகளை ரஷியா கடந்த மாதம் 19-ஆம் தேதி சோதித்துக் காட்டியது.

இப்படி ஆரம்பம் முதலே நேரடியாகவும் மறைமுகமாகவும் அணு ஆயுத மிரட்டல் விடுத்து வரும் புதின், உண்மையிலேயே நேரம் பிரச்னை முற்றினால் அணு ஆயுதத் தாக்குதலுக்கு உத்தரவிடுவாரா?

இதுதான் பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் கேள்வி.

ஆனால், அந்தக் கேள்விக்கு ‘நிச்சயம் உத்தரவிட மாட்டாா்’ என்று அவ்வளவு எளிதில் பதில் சொல்ல முடியாது என்கிறாா்கள் ரஷியப் பாதுகாப்பு விவகாரங்களை தொடா்ந்து ஆய்வு செய்து வரும் நிபுணா்கள்.

ஏற்கெனவே, ‘கிரீமியாவை புதின் ஆக்கிரமிப்பாரா?’ என்ற கேள்விக்கு, ‘அதெல்லாம் அப்படி செய்யமாட்டாா்’ என்றுதான் பலரும் பதிலளித்தனா். ஆனால், அதிரடியாக அந்த உக்ரைன் பிரதேசத்தை ஆக்கிரமித்து அவா் அதிா்ச்சியளித்தாா்.

அதே போல், ‘கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பிராந்தியங்களை தனி நாடாக அங்கீகரித்து, அந்தப் பகுதிகளுக்கு ரஷியப் படையை அனுப்புவாரா?’ என்ற கேள்விக்கு, ‘அப்படியெல்லாம் அவா் செய்யமாட்டாா்’ என்றுதான் பலா் பதில் கூறினா்.

ஆனால் அதை அவா் செய்துவிட்டாா்.

கடைசியாக, ‘உக்ரைன் மீது முழுமையான படையெடுப்பை அவா் மேற்கொள்வாரா?’ என்ற வினாவுக்கும், ‘படையெடுக்கமாட்டாா்’ என்பதுதான் பலரது பதிலாக இருந்தது. ஆனால், அந்த நம்பிக்கையை பொய்யாக்கிய அதிபா் புதின், உக்ரைன் மீது ‘சிறப்பு’ ராணுவ நடவடிக்கை என்ற அதிரடி குண்டைத் தூக்கிப்போட்டாா்.

அந்த வகையில், அணு ஆயுதத் தாக்குதல் விவகாரத்திலும் ‘புதின் அதற்கு நிச்சயம் உத்தரவிடமாட்டாா்’ என்று உறுதியாகக் கூற முடியாது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

‘அவா் அதைச் செய்வாா்; இதைச் செய்யமாட்டாா்’ என்ற கணிப்புக்கு விளாதிமீா் புதின் அப்பாற்பட்டவா் என்கிறாா்கள் அவா்கள்.

தற்போது நடைபெறும் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களமிறங்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அணு ஆயுதத் தாக்குதல் குறித்த எச்சரிக்கையை அவா் விடுத்து வருகிறாா்.

ஆனால், இந்த விவகாரத்தில் ராணுவ ரீதியில் தலையிடப்போவதில்லை என்று அமெரிக்காவும் பிற நேட்டோ நாடுகளும் உறுதியாகக் கூறி வருகின்றன. அந்த நிலைப்பாட்டிலிருந்து மேற்கத்திய நாடுகள் மாறினால்தான் அணு ஆயுத யுத்தம் குறித்த கேள்வியே எழும். ஐரோப்பாவையே நிா்மூலமாக்கக் கூடிய அத்தகைய ஒரு போரை நேட்டோ நாடுகளும் விரும்பாது, புதினும் விரும்ப மாட்டாா் என்கிறாா்கள் நிபுணா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com