எரிபொருள் பற்றாக்குறை: இலங்கையில் இன்று முதல் 10 மணி நேர மின் வெட்டு

சுழற்சி முறையில் இன்று முதல் 10 மணி நேரம் மின் வெட்டு செய்ய சிலோன் மின் வாரியம் வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை: இலங்கையில் இன்று முதல் 10 மணி நேர மின் வெட்டு
எரிபொருள் பற்றாக்குறை: இலங்கையில் இன்று முதல் 10 மணி நேர மின் வெட்டு

பொருளாதார நெருக்கடி காரணமாக, சுழற்சி முறையில் இன்று முதல் 10 மணி நேரம் மின் வெட்டு செய்ய சிலோன் மின் வாரியம் வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை மற்றும் போதிய ஜெனரேட்டர்கள் இல்லாததால் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக, புதன் மற்றும் வியாழக்கிழமையன்று 10 மணி நேரம் மின் வெட்டு இருக்கும் என்றும் சிலோன் மின் வாரியம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று மட்டும் 10 மணி நேர மின் வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், அது மேலும் ஒரு நாளுக்கு தொடரும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து இலங்கை பொது பயன்பாட்டு ஆணைய நிர்வாகி ஜனக ரத்னநாயகே இது குறித்து பேசுகையில், சிலோன் மின் வாரியம், இன்று 12 மணி நேர மின் வெட்டுக்கு அனுமதி கோரியது. ஆனால், இலங்கை பொது பயன்பாட்டு ஆணையம் சார்பில் 2,000 மெட்ரிக் டன் டீசல் வரவழைக்கப்பட்டு ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு வழிவகை செய்யப்பட்டதையடுத்து, 12 மணி நேர மின் வெட்டு நேரம் குறைக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.

750 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஆலைக்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, இன்று 10 மணி நேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

பொருளாதார பற்றாக்குறை காரணமாக அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான டீசல் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், இலங்கையில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. 

10 மணி நேர மின்வெட்டானது காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் என பகுதிகள் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மீண்டும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என இரண்டு பிரிவுகளாகப் பிரித்தும் மின்வெட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின் வெட்டு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, பெரிய அளவில் வணிக நடவடிக்கைகள் பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில்களும் வணிகமும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த மின்வெட்டு பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று வணிகர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com