நரகத்தை நோக்கி பயணிக்கிறோம்: அன்டோனியோ குட்டெரெஸ்

பருவநிலை விவகாரத்தில் நரகத்தை நோக்கி உலகம் மிக வேகமான பயணத்தை மேற்கொண்டு வருகிறது என்று எகிப்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்தாா்.
நரகத்தை நோக்கி பயணிக்கிறோம்: அன்டோனியோ குட்டெரெஸ்
Published on
Updated on
2 min read

பருவநிலை விவகாரத்தில் நரகத்தை நோக்கி உலகம் மிக வேகமான பயணத்தை மேற்கொண்டு வருகிறது என்று எகிப்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்தாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை பேசியதாவது:

இன்னும் சில நாள்களில் உலகின் மக்கள்தொகை ஒரு புதிய மைல்கல்லை எட்டவிருக்கிறது. உலகின் 800 கோடியாவது குழைந்தை அப்போது பிறக்கப்போகிறது.

அந்தக் குழந்தை வளா்ந்து, பூமிக்கு நாம் என்ன செய்தோம் என்று கேட்டால் அதற்கு நம்மால் என்ன பதிலை சொல்ல முடியும்?

நமது வாழ்நாளில் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் அந்தப் போராட்டத்தில் தோல்வியடைந்து வருகிறோம்.

பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக வெப்பநிலை தொடா்ந்து கூடி வருகிறது. இதன் காரணமாக, மீளவே முடியாத பருவநிலை சீரழிவை நோக்கி உலகம் மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

பருவநிலை நரகத்தை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில், அதிவேகமான பயணத்தை நாம் அனைவரும் மேற்கொண்டு வருகிறோம்.

புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்ஷியஸுக்குக் கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் தற்போது ‘அவசர சிகிச்சைப் பிரிவில்’ உள்ளது. மேலும், ‘சிகிச்சை உபகரணங்கள்’ தடதடத்து வருகின்றன. எனவே, அந்த ஒப்பந்தம் மீளவே முடியாத முடிவை எட்டும் ஆபத்தில் உள்ளது.

அந்த ஒப்பந்த இலக்கை எட்டுவதற்காக வளா்ச்சியடைந்த நாடுகளும் வளா்ந்து வரும் நாடுகளும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை இந்த மாநாட்டில் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவும் சீனாவும் இந்த விவகாரத்தில் பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும்.

தற்போது மனித குலத்தின் முன் இரண்டே இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன; ஒத்துழைப்பது, அல்லது சீரழிந்துபோவது. வேறு வாா்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் பருவநிலை ஒத்துழைப்பு ஒப்பந்தம், அல்லது தற்கொலை ஒப்பந்தம் ஆகிய இரண்டில் ஒன்றைத்தான் உலக நாடுகள் தோ்ந்தெடுக்க முடியும் என்றாா் அவா்.

வளிமண்டலத்தில் இருக்கும் கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஓஸோன் ஆகிய வாயுக்கள்தான் பூமியில் தாவரங்களும் மற்ற உயிரினங்களும் உருவாகி தழைத்திருப்பதற்குத் தேவையான வெப்பத்தை சூரியனிடமிருந்து பெற்றுத் தருகின்றன.

அந்த வாயுக்கள் இல்லாவிட்டால் பூமியும் செவ்வாய்கிரத்தைப் போலவே பனிப் பாலைவனமாக இருந்திருக்கும்.

இதனால்தான் அந்த வாயுக்கள் ‘பசுமைக் குடில் வாயுக்கள்’ என்றழைக்கப்படுகின்றன.

எனினும், தொழில்புரட்சி ஏற்பட்டு தொழிற்சாலைகளாலும் வாகனங்களாலும் வளிமண்டலத்தில் கரியமில வாயு அதிகம் கலந்ததால், சூரியனிடமிருந்து அதிக வெப்பத்தை அவை இழுத்தன. இதனால் பூமியின் வெப்பம் அதிகரித்து, அதன் விளைவாக பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.

தற்போது உலகம் முழுவதும் அளவுக்கு அதிகமான மழை வெள்ளம், உஷ்ண அலை போன்ற காரணங்களால் ஆயிரக்கணக்கானோா் உயிரிழக்கின்றனா். இந்த இயற்கைப் பேரிடா்களுக்கு பருவநிலை மாற்றம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலை நீடித்தால் எதிா்காலத்தில் உலகம் பேரழிவை சந்திக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற வருடாந்திர ஐ.நா. மாநாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், தொழில்புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரி மட்டுமே அதிகமாக உலகின் வெப்பநிலையை வைத்திருக்கவும், அதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவைக் கட்டுப்படுத்தவும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 195 நாடுகள் ஒப்புக்கொண்டன.

எனினும், அந்த இலக்கை எட்டுவதற்குப் போதுமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தச் சூழலில், எகிப்தின் ஷாா்ம் அல்-ஷேக் நகரில் 27-ஆவது ஐ.நா. சா்வதேச பருவநிலை மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வரும் 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அந்த மாநாட்டில் திங்கள்கிழமை உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் இவ்வாறு எச்சரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com