உலக மக்கள் தொகை 800 கோடியைத் தொடுகிறதா?

ஐ.நா கணிப்பின்படி உலக மக்கள்தொகை இந்த மாதம் 15 ஆம் தேதி 800 கோடி என்ற மைல்கல்லை தொடுகிறது. ஐ.நாவின் மதிப்பீட்டின்படி, 2050 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகை 970 கோடியாக இருக்கும். 
உலக மக்கள் தொகை 800 கோடியைத் தொடுகிறதா?


நியூயார்க்: ஐ.நா கணிப்பின்படி உலக மக்கள்தொகை இந்த மாதம் 15 ஆம் தேதி 800 கோடி என்ற மைல்கல்லை தொடுகிறது. ஐ.நாவின் மதிப்பீட்டின்படி, 2050 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகை 970 கோடியாக இருக்கும். 

உலக மக்கள் தொகை நாள் ஆண்டுதோறும் ஜூலை 11 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக மக்கள் தொகை நாளன்று ஐ.நா வெளியிட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்தில், நவம்பர் 15 ஆம் தேதி உலக மக்கள்தொகை 800 கோடியை தொடும் என கணித்திருந்தது. தற்போது நவம்பர் 15க்கு நாள்கள் நெருங்கிவிட்டதால் இந்த புள்ளிவிவரங்கள் மீண்டும் கவனத்தை பெற்றுள்ளது. ஏற்கனவே, உலக மக்கள்தொகை 800 கோடியை கடந்து விட்டதாக அமெரிக்க புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் தொகையானது சராசரியாக 1.10 சதவீதம் அதிகரிக்கிறது. இதில் கரோனா நோய்த்தொற்றால் 2020 ஆம் ஆண்டு மட்டும் 1 சதவீதத்திற்கும் குறைவாக பதிவாகி இருந்தது. 

ஐ.நா கணிப்பின்படி அடுத்த ஆண்டு அதிக மக்கள் தொகை நாடு என்ற சீனாவின் சாதனையை இந்தியா முறியடிக்கும் என கூறப்பட்டுள்ளது. 

மேலும், 2030 இல் உலக மக்கள் தொகை 850 கோடியாகவும், 2050 இல் 970 கோடியாகவும், 2080 இல் 1040 கோடியாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2050 இல் அதிகரிக்கும் மக்கள் தொகையில் 50 சதவீத்தை காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய 8 நாடுகள் கொண்டிருக்கும் என ஐ.நா கூறியுள்ளது. 

ஐ.நா மக்கள் தொகை நிதியத்தின் தலைவர் நடாலியா, 800 கோடி மக்கள் தொகை "மனிதகுலத்திற்கு ஒரு முக்கியமான மைல்கல்". மக்கள்தொகை அதிகரிப்பை பொறுத்தவரை, இது ஆயுள்காலம் அதிகரிப்பதையும், தாய் மற்றும் குழந்தை இறப்புகள் குறைவாக இருப்பதையே குறிக்கிறது.

ஆனால், இந்த மக்கள் தொகை அதிகரிப்பு கொண்டாட்டங்களை விட அதிக கவலைகளை ஏற்படுத்துகிறது என கூறியுள்ளார்.

மக்கள்தொகை நிபுணர் கனெம் கருத்துப்படி, உலகின் அதிக மக்கள்தொகையைப் பற்றி கவலைப்பட வேண்டாம், ஆனால், பணக்காரர்களின் அதிகயளவு நிலத்தின் வளங்களின் நுகர்வுகள் குறித்தே கவலைப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், "இந்த தருணத்தை அனைவராலும் கொண்டாட முடியாது என்பதை உணரமுடிகிறது.  உலகம் அதிக மக்கள் தொகை கொண்டதாக இருப்பதாக சிலர் கவலை தெரிவிக்கின்றனர். ஆனால், மனித உயிர்களின் எண்ணிக்கை அச்சத்திற்கு ஒரு காரணம் அல்ல," என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com