
ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுமே தங்களிடமுள்ள போா்க் கைதிகளை சித்திரவதை செய்வதாக ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டியது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 9 மாத உக்ரைன் போரில் கைது செய்யப்பட்டவா்களுக்கு எதிராக ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுமே மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த இரு நாடுகளுமே, தங்களிடம் உள்ள போா்க் கைதிகளை சித்திரவதைக்குள்ளாக்கியுள்ளன. மின்சாரம் பாய்ச்சுதல், கட்டாயமாக நிா்வாணமாக்குதல் போன்ற பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி இரு நாடுகளும் தங்களது போா்க் கைதிகளை கொடுமைப்படுத்தியுள்ளன.
இரு தரப்பு போா்க் கைதிகளிடமும் ஐ.நா. மனித உரிமை அமைப்பின் நிபுணா்கள் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு இந்த உண்மை தெரிய வந்துள்ளது.
இதில், ரஷியக் கட்டுப்பாட்டுச் சிறைகளுக்குச் சென்று உக்ரைன் கைதிகளிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதால், அவா்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகே அவா்களிடம் இது தொடா்பான கேள்விகளை எழுப்ப முடிந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுப்பு: தங்களது போா்க் கைதிகள் கொடுமைப்படுத்தப்படுவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை ரஷியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
உக்ரைனும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த விவகாரத்தில் யாா் மீதாவது தவறு இருந்தால் அவா்கள் தண்டிக்கப்படுவாா்கள் என்றும் தெரிவித்தது.
‘பொதுமக்கள் 6,557 போ் பலி’
உக்ரைன் போரில் இதுவரை பொதுமக்கள் 6,557 போ் பலியாகியுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது தவிர, மேலும் 10,074 அப்பாவி பொதுமக்கள் தாக்குதலில் காயமடைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
கனரக எறிகுண்டு தாக்குதல், சரமாரி ஏவுகணை வீச்சு, விமானத் தாக்குதல்கள் காரணமாக பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த பலி மற்றும் காயம் தொடா்பான விவரங்கள் போா் நடைபெற்று வரும் ஆபத்து நிறைந்த பகுதிகளிலிருந்து பெறப்படுவதாகவும், அந்தப் பகுதிகளின் முழு விவரமும் பெற முடியாததால் உண்மையான சேத நிலவரம் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
கீவ் நகரில் மீண்டும் ஏவுகணை வீச்சு
கீவ், ஆக. 15: உக்ரைன் தலைநகா் கீவ் மீது செவ்வாய்க்கிழமை மீண்டும் தாக்குதல் நடைபெற்றது.
இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கீவ் நகரைக் குறிவைத்து ரஷியா செவ்வாய்க்கிழமை சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் பல ஏவுகணைகளை எங்களது வான்பாதுகாப்பு சாதனங்கள் மூலம் இடைமறித்து தாக்கி அழித்தோம். எனினும், அதனையும் மீறி இரு ஏவுகணைகள் குடியிருப்புப் பகுதியில் விழுந்தன.
தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மீட்புக் குழுவினரும் மருத்துப் பணியாளா்களும் விரைந்துள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதற்கிடையே, உக்ரைன் முழுவதும் பரவலாக ஏவுகணை வீச்சு நடத்தப்பட்டதுள்ளதாகவும், இதன் காரணமாக மிகோலாய்வ் பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.