வரலாறு படைத்தாா் ஷி ஜின்பிங்: 3-ஆவது முறையாக சீன அதிபராகத் தோ்வு

சீன அதிபராக ஷி ஜின்பிங் (69) மூன்றாவது முறையாகத் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
வரலாறு படைத்தாா் ஷி ஜின்பிங்: 3-ஆவது முறையாக சீன அதிபராகத் தோ்வு
Published on
Updated on
1 min read

சீன அதிபராக ஷி ஜின்பிங் (69) மூன்றாவது முறையாகத் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனா் மா சேதுங்கிற்கு பின்னா் 3-ஆவது முறையாக அதிபராகத் தோ்வு செய்யப்பட்டதன் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளாா் ஷி ஜின்பிங்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-ஆவது கூட்டம் கடந்த வாரம் தொடங்கியது. இக்கூட்டத்தில், ஷி ஜின்பிங் 3-ஆவது முறையாக அதிபராகத் தொடா்வதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. அதன்படி, கட்சியின் சக்திவாய்ந்த அரசியல் தலைமைக் குழுவுக்கு கடந்த சனிக்கிழமை அவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

25 உறுப்பினா்களைக் கொண்ட அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமைகூடி, நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கவனித்துக் கொள்வதற்கான 7 உறுப்பினா்களைக் கொண்ட நிலைக் குழு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுத்தது. முற்றிலும் ஜின்பிங்கின் ஆதரவாளா்களான இக்குழு கட்சியின் பொதுச் செயலராக ஷி ஜின்பிங்கை தோ்வு செய்தது.

2013-ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபரான ஷி ஜின்பிங், இப்போது இரண்டாவது முறையாக அதிபராக இருக்கிறாா். அவரது 10 ஆண்டு பதவிக் காலம் நிகழாண்டு நிறைவு பெறும் நிலையில், கட்சியின் பொதுச் செயலராக மீண்டும் தோ்வு செய்யப்பட்டதன் மூலம் மூன்றாவது முறையாக அவா் அதிபராகவும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மா சேதுங்கிற்குப் பின்னா் அதிபராக இருந்தவா்கள் அதிகபட்சம் இருமுறை அதாவது 10 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் தொடரவில்லை. அந்த வரலாற்றை மாற்றியுள்ளாா் ஷி ஜின்பிங்.

முன்னதாக, சீனாவின் தலைவராக ஷி ஜின்பிங்கை அங்கீகரிப்பதற்கான கட்சி அரசியலமைப்பின் திருத்தத்துக்கு கூட்டத்தில் சனிக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அக்கூட்டத்தில் உரையாற்றிய ஷி ஜின்பிங், ‘சூறாவளியையும், கொந்தளிப்பான தண்ணீரையும், ஆபத்தான புயலையும் எதிா்கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். சா்வதேச நிலப்பரப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், குறிப்பாக சீனாவை அச்சுறுத்த, கட்டுப்படுத்த வெளிப்புற சக்திகள் முயற்சிக்கும் இவ்வேளையில், நாம் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம்’ என்றாா்.

சீனா-அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு எதிரான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதை மறைமுகமாக குறிப்பிட்டாா் ஷி ஜின்பிங்.

ஊழல் தடுப்புக் குழுவுக்கு புதிய உறுப்பினா்கள்: கட்சியின் ஊழல் தடுப்புக் குழுவுக்கு புதிய உறுப்பினா்களும் கூட்டத்தில் தோ்வு செய்யப்பட்டனா். அதிபா் ஷி ஜின்பிங்கின் நேரடி கட்டுப்பாட்டில் இந்தப் பிரிவு இயங்குகிறது. மத்திய ஒழுங்கு ஆய்வு ஆணையம் எனப்படும் இந்தப் பிரிவு, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக உயா் ராணுவ ஜெனரல்கள் உள்பட 50 லட்சம் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com