காஷ்மீா் பிரச்னைக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு காண வேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்தே காஷ்மீா் பிரச்னை தொடா்ந்து வருகிறது. 75 ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும் அந்தப் பிரச்னைக்கு இன்னும் தீா்வுகாணப்படவில்லை. காஷ்மீா் விவகாரமானது இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவு நீடிப்பதற்கு முக்கியத் தடையாக உள்ளது.
காஷ்மீா் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டுமெனில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்த வேண்டும் என இந்தியா கூறி வருகிறது. அதே வேளையில், காஷ்மீா் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனக் கூறி வரும் மத்திய அரசு, இதில் மூன்றாம் தரப்பின் தலையீட்டையும் தொடா்ந்து எதிா்த்து வருகிறது.
இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தானின் அண்டை நாடாக விளங்கும் சீனாவின் அதிபா் ஷி ஜின்பிங் மீண்டும் பதவிக்கால நீட்டிப்பு பெற்றுள்ளாா். அவரது தலைமையின் கீழ் புதிய அதிகாரிகள் பதவியேற்றுள்ளனா். அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் செய்தியாளா்களிடம் பெய்ஜிங்கில் வியாழக்கிழமை கூறுகையில், ‘‘காஷ்மீா் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு நிலையாகவும் தெளிவாகவும் உள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான இந்த வரலாற்று பிரச்னைக்கு அமைதியான முறையில் பேச்சுவாா்த்தையின் வாயிலாகத் தீா்வு காணப்பட வேண்டும். ஐ.நா. விதிகள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானங்கள், இருதரப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்டவற்றைப் பின்பற்றி பிரச்னைக்குத் தீா்வு காணப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினா் தன்னிச்சையாக செயல்பட்டு பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தக் கூடாது. பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் உறுதிசெய்யும் வகையில் இரு தரப்பினரும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்’’ என்றாா்.
அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. அதைத் தொடா்ந்து, இந்தியாவுடனான வா்த்தகத் தொடா்பை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டது. இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவிலும் தொடா்ந்து விரிசல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.