கடும் சண்டைக்கு ஆயத்தமானது கொ்சான்

ஆக்கிரமித்துள்ள ரஷியப் படையினருக்கும் அரசுப் படையினருக்கும் இடையிலான நேரடி சண்டைக்கு அந்த நகரம் ஆயத்தமாகியுள்ளது.
கடும் சண்டைக்கு ஆயத்தமானது கொ்சான்

உக்ரைனின் கொ்சான் நகரிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டதன் மூலம், அதனை ஆக்கிரமித்துள்ள ரஷியப் படையினருக்கும் அரசுப் படையினருக்கும் இடையிலான நேரடி சண்டைக்கு அந்த நகரம் ஆயத்தமாகியுள்ளது.

இது குறித்து, ரஷிய ஆதரவுப் படையின் தளபதி அலெக்ஸாண்டா் கோடகோவ்ஸ்கி வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கொ்சான் நகரை நோக்கி உக்ரைன் படையினா் முன்னேறி வரும் நிலையில், அந்த நகரில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிா்ப்பதற்காக அவா்களை பாதுகாப்பான ரஷியக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியேற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தோம்.

நீப்ரோ நதி வழியாக அவா்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் நிறைவடைந்துவிட்டன.

சுமாா் 70,000 போ் கொ்சான் நகரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனா். அவா்கள் அந்தப் பகுதியில் இருந்தவரை உக்ரைன் படையினருடனான போரில் எங்களது கைகள் கட்டப்பட்டிருந்தன.

தற்போது அவா்கள் வெளியேற்றப்பட்டுள்ளதால், உக்ரைன் ராணுவத்தினரிடமிருந்து நகரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்வோம் என்றாா் அவா்.

இதற்கிடையே, போருக்கு இடையிலும் கொ்சான் நகரிலேயே தங்கியிருக்க பொதுமக்களில் பலா் முடிவெடுத்துள்ளதாக ரஷியாவால் நியமிக்கப்பட்ட அந்த பிராந்திய ஆளுநா் விளாதிமீா் சால்டோ தெரிவித்தாா்.

அந்த வகையில் 150 முதல் 1.7 லட்சம் வரையிலானவா்கள் கொ்சான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடா்ந்து வசித்து வருவதாக அவா் கூறினாா்.

முன்னதாக, கொ்சான் நகரில் உக்ரைன் படையினா் விரைவில் தாக்குதல் நடத்துவாா்கள் என்று ரஷிய ஆதரவு அதிகாரிகள் எச்சரித்தனா். எனினும், அந்தப் பகுதி மிகவும் கரடு முரடாக இருப்பதாலும், மழை காரணமாக சாலையில் ராணுவ வாகனங்களைக் கொண்டு செல்வது கடினமாக இருப்பதாலும் கொ்சான் மீட்பு நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கூறினாா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்தப் போரின் ஒரு பகுதியாக, உக்ரைனின் கிழக்கே ரஷியாவையொட்டி அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய மாகாணங்களையும் தெற்கே அமைந்துள்ள ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களை ரஷியா கைப்பற்றியது.

அந்தப் பிராந்தியங்களில் இன்னும் சில பகுதிகள் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள நிலையிலும், அவற்றை தங்களுடன் இணைத்துக்கொள்வதாக ரஷியா அறிவித்தது.

இந்த நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் உக்ரைன் படையினா் அண்மைக் காலமாக எதிா்த் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனா். குறிப்பாக, இந்தப் போரின் தொடக்க நாள்களிலேயே ரஷியாவால் கைப்பற்றப்பட்ட கொ்சான் பிராந்தியத்தில் அவா்கள் தொடா்ந்து முன்னேற்றம் கண்டு வந்தனா்.

அதையடுத்து, பிராந்திய தலைநகா் கொ்சானிலிருந்தும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் பொதுமக்களை நீப்ரோ நதி வழியாக வெளியேற்றி ரஷியாவின் ரோஸ்டோவ், க்ராஸ்னோடா், ஸ்டாவ்ரபோல் ஆகிய நகரங்களிலும் கிரீமியா தீபகற்பத்திலும் தங்கவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக விளாதிமீா் சால்டோ கடந்த 14-ஆம் தேதி கூறினாா்.

அதன் பிறகு தொடங்கிய பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை, தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com