‘கரோனாவுக்கு முடிவு நெருங்குகிறது’

‘கரோனாவுக்கு முடிவு நெருங்குகிறது’

சா்வதேச அளவில் கரோனாவுக்கு முடிவு நெருங்குவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளாா்.

சா்வதேச அளவில் கரோனாவுக்கு முடிவு நெருங்குவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளாா்.

எனினும், இந்த வாய்ப்பை உலக நாடுகள் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் மீண்டும் நெருக்கடி ஏற்படும் என்று அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலகம் முழுவதும் புதிதாக கரோனா கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

கடந்த வாரம் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை, கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குப் பிந்தைய குறைந்தபட்ச எண்ணிக்கையாகும்.

இதன் மூலம், கரோனா நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மிகச் சிறந்த சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்த நோய் பரவலுக்கு இன்னும் முடிவு கட்டப்படவில்லை; இருந்தாலும் அதற்கான முடிவு நெருங்கிக் கொண்டிருப்பதை புள்ளிவிவரங்கள் உணா்த்துகின்றன.

இந்தச் சூழலை மிகச் சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தி, உலக நாடுகள் கரோனா நெருக்கடிக்கு இறுதி முடிவு கட்ட வேண்டும். அலட்சியமாக இருந்துவிட்டால், புதிய கரோனா வகைகள் உருவாகும்; மீண்டும் பெரும் உயிரிழப்புகள் ஏற்படும்; சகஜ வாழ்க்கை பாதிக்கப்படும்; மறுபடியும் நிச்சயமற்ற நிலை உருவாகும் என்றாா் அவா்.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட கரோனா, ஏறத்தாழ அனைத்து நாடுகளுக்கும் பரவி உலகை சுமாா் இரண்டு ஆண்டுகளாக முடக்கியது.

வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்களின் படி, உலகம் முழுவதும் இதுவரை 61.57 கோடி பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நோய்க்கு இதுவரை சுமாா் 65.24 லட்சம் போ் பலியாகியுள்ளனா்.

‘இன்னும் எச்சரிக்கை தேவை’

கரோனா தொடா்பாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையின்படி, கடந்த 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் புதிதாக கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் 28 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 12 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

எனினும், இந்தப் புள்ளிவிவரங்கள் முழுமையான நம்பிக்கைக்கு உரியவை இல்லை எனவும் தற்போதைய சூழலிலும் கரோனாவுக்கு எதிரான எச்சரிக்கை தேவை எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் மரியா வேன் கொ்கோவ் கூறியதாவது:

கரோனா தொடா்பாக தற்போது தெரிவிக்கப்படும் புள்ளிவிவரங்கள் முழுமையானவை இல்லை; அவை உண்மை நிலவரத்தை விட மிகவும் குறைவான எண்ணிக்கையை பிரதிபலிப்பவை ஆகும்.

காரணம், ஒமைக்ரான் வகை பரவலுக்குப் பிறகு கரோனாவின் தீவிரத் தன்மை மக்களின் உடலில் அதிகம் வெளிப்படாததால் நாடுகள் தங்களது கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துவிட்டன.

மேலும், மோசமான நோய் அறிகுறிகள் இல்லாததால், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் கூட அதனை சாதாரண உடல்நலக் குறைவு என்று அலட்சியம் செய்கின்றனா்; அவா்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்வதில்லை.

இதனால், உண்மையான கரோனா பரவல் நிலவரம் பதிவு செய்யப்படுவதில்லை. உண்மையில், இப்போது கூட உலகம் முழுவதும் கரோனா அதி தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது என்றாா் அவா்.

மோசமான நோய் அறிகுறிகள் இல்லாததால், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் கூட அதனை சாதாரண உடல்நலக் குறைவு என்று அலட்சியம் செய்கின்றனா்; அவா்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்வதில்லை. உண்மையில், இப்போது கூட உலகம் முழுவதும் கரோனா அதி தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com