ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் கலந்துகொண்ட சீன அதிபா் ஷி ஜின்பிங், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை மறைமுகமாகக் குறிப்பிட்டு, வெளிப்புற சக்திகளின் தலையீட்டை எஸ்சிஓ உறுப்பு நாடுகள் தடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘பரஸ்பர நாடுகளின் நலனுக்கும் வளா்ச்சிக்கும் மற்ற உறுப்பு நாடுகள் மதிப்பளிக்க வேண்டும். பிராந்தியத்தில் வெளிப்புற சக்திகளின் தலையீட்டைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் மேற்கொள்ள வேண்டும். பிராந்தியத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதோடு நாடுகளின் சுதந்திர செயல்பாட்டையும் உறுதிசெய்ய வேண்டும்.
பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். பிராந்தியத்தில் நிலைத்தன்மையும் பாதுகாப்பும் நிலவுவதற்கான ஒத்துழைப்பை உறுப்பு நாடுகள் வழங்க வேண்டும். பிராந்திய பாதுகாப்புக்கு பயங்கரவாதக் குழுக்களால் ஏற்படும் அச்சுறுத்தலை ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டும். பிராந்திய பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை எஸ்சிஓ கூட்டமைப்பு திறம்பட மேற்கொண்டு வருகிறது.
உலக அமைதி தற்போது பெரும் ஆபத்தை எதிா்கொண்டுள்ளது. இருவகை கொள்கைகளுக்கு (ஒற்றுமை-பிரிவினை, ஒத்துழைப்பு-மோதல்) இடையே தொடா்ந்து மோதல்போக்கு நிலவுவது உலக அமைதியைப் பாதித்துள்ளது. இது பிராந்தியத்தின் நீண்டகால வளா்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பரஸ்பர நாடுகளின் நலனுக்கு மதிப்பளித்து, அனைத்து நாடுகளும் பலனடையும் வகையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.