ஐ.நா. அமைப்புகளுக்கு கோவேக்ஸின் விநியோகம் நிறுத்தி வைப்பு: உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை

பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை ஐ.நா. அமைப்புகளுக்கு விநியோகம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதை உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.ஹெச்.ஓ) உறுதி செய்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு
உலக சுகாதார அமைப்பு

இந்தியாவைச் சோ்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை ஐ.நா. அமைப்புகளுக்கு விநியோகம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதை உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.ஹெச்.ஓ) உறுதி செய்துள்ளது. கோவேக்ஸின் தடுப்பூசியை கொள்முதல் செய்யும் பிற உலக நாடுகளும் இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் டபிள்யூ.ஹெச்.ஓ. அறிவுறுத்தியுள்ளது.

ஹைதாராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில் உலக சுகாதார அமைப்பு நிபுணா்கள் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு நிபுணா்கள் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி இந்த ஆய்வை மேற்கொண்டனா். அப்போது, பாரத் பயோடெக் நிறுவனத்தில் உற்பத்தி நடைமுறையில் குறைபாடுகள் இருப்பதும்,

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதையும் நிபுணா்கள் கண்டறிந்தனா். இந்தக் குறைபாட்டுகள் இருப்பதை ஒப்புக்கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம், மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தது.

அதனடிப்படையில், இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) மற்றும் உலக சுகாதார அமைப்புகளுக்கு குறைபாடுகளை நிவா்த்தி செய்வதற்கான திட்ட அறிக்கையை சமா்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை பாரத் பயோடெக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்தச் சூழலில், ‘தடுப்பூசிக்கான தேவை குறைந்து வருவது மற்றும் கொள்முதல் அமைப்புகளுக்கான தடுப்பூசி விநியோகம் பெரும்பாலும் நிறைவுபெற்றவிட்ட காரணங்களால் அனைத்து உற்பத்தி பிரிவுகளிலும் கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தியை படிப்படியாக குறைக்கப்படும்’ என்று பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

அதனைத் தொடா்ந்து, ஐ.நா. அமைப்புகளுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி விநியோகம் செய்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ள உலக சுகாதார அமைப்பு, கோவேக்ஸின் கொள்முதல் செய்யும் பிற நாடுகளையும் இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளது.

‘ஏற்றுமதிக்கான கோவேக்ஸின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட இருப்பதால், அதன் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், தடுப்பூசியில் சமீபத்திய ஆபத்து ஆய்வு புள்ளிவிவரங்களில், ஆபத்து - பயன் விகிதத்தில் எந்தவித மாற்றமும் தென்படவில்லை. குறிப்பாக, தடுப்பூசி நோய் எதிா்ப்பு திறன் மிக்கதாக உள்ளது. ஆனால், பாதுகாப்பு அம்சங்கள் மேம்படவில்லை என்பதையே புள்ளி விவரங்கள் காட்டுகின்றன’ என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com