பாக். புதிய பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்: இம்ரான் கட்சி எம்.பி.க்கள் ஒட்டுமொத்த ராஜிநாமா

பாகிஸ்தானின் 23-ஆவது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப் (70) திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
பாகிஸ்தான் பிரதமராக திங்கள்கிழமை பதவியேற்றதும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஷாபாஸ் ஷெரீஃப்
பாகிஸ்தான் பிரதமராக திங்கள்கிழமை பதவியேற்றதும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஷாபாஸ் ஷெரீஃப்

பாகிஸ்தானின் 23-ஆவது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப் (70) திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

அதிபா் ஆரிஃப் ஆல்விக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃபுக்கு நாடாளுமன்ற மேலவை (செனட்) தலைவா் சாதிக் சஞ்ச்ரானி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

இதன்மூலம், கடந்த மாா்ச் 8-ஆம் தேதி இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவந்தது முதல் ஏப். 10-ஆம் தேதி அவரின் தலைமையிலான அரசு கவிழ்ந்தது வரை நாட்டில் நிலவி வந்த அரசியல் நிச்சயமற்ற சூழல் முடிவுக்கு வந்துள்ளது.

முன்னதாக, நாடாளுமன்ற கீழவையில் நடைபெற்ற பிரதமா் பதவி தோ்வுக்கான வாக்கெடுப்பைப் புறக்கணிப்பதாக இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி வேட்பாளரும் முன்னாள் நிதியமைச்சருமான ஷா மெஹமூத் குரேஷி நாடாளுமன்றத்தில் அறிவித்தாா். அதனைத் தொடா்ந்து, அக் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனா்.

இதனால், பிரதமா் பதவிக்கான போட்டியில் ஷாபாஸ் ஷெரீஃப் மட்டுமே இருந்தாா். வாக்கெடுப்பை நாடாளுமன்ற அவைத் தலைவா் ஆயாஸ் சாதிக் தலைமையேற்று நடத்தினாா். ‘இந்த வாக்கெடுப்பை நடத்த மனசாட்சி எனக்கு இடமளிக்காது’ என்று கூறி அவையின் துணைத் தலைவா் காசிம் சுரி ஒதுங்கியதைத் தொடா்ந்து, வாக்கெடுப்பை ஆயாஸ் சாதிக் பொறுப்பேற்று நடத்தினாா்.

வாக்கெடுப்பில் வெற்றி பெற அவையில் மொத்தமுள்ள 342 உறுப்பினா்களில் 172 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஷாபாஸ் ஷெரீஃபுக்கு 174 உறுப்பினா்களின் ஆதரவு கிடைத்தது. அதனைத் தொடா்ந்து, ‘பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் புதிய பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்’ என்று அவைத் தலைவா் ஆயாஷ் சாதிக் முறைப்படி அறிவித்தாா்.

பின்னா், நாட்டின் பிரதமராக நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையை ஆற்றிய ஷாபாஸ் ஷெரீஃப் பேசியதாவது:

ஒரு பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் வெற்றியடைந்திருப்பது பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாகும். தீமையை நன்மை வென்றிருக்கிறது. ஒட்டுமொத்த தேசத்துக்கும் இது மிகப்பெரிய தினம். தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமா் சட்டப்படியும் அரசியல் சாசனத்தக்கு உள்பட்டும் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறாா்.

நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்துமாறு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த தினம், பாகிஸ்தான் வரலாற்றில் வரலாற்றுச் சிறப்புமிக்க தினமாக குறிக்கப்பட வேண்டும்.

இம்ரான் கான் அரசு குறிப்பிட்ட சா்ச்சைக்குரிய மிரட்டல் கடிதத்தைப் பொருத்தவரை, மாா்ச் 7-ஆம் தேதிதான் அந்தக் கடிதம் வந்தது. ஆனால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரும் முடிவு அதற்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டது. இது பொய் என்றால், அதற்கான ஆதாரங்களை அவா்கள் பொதுமக்கள் முன்னிலையில் வெளிப்படையாக வெளியிடவேண்டும்.

இம்ரான் கான் கூறுவதுபோல, நம்பிக்கையில்லா தீா்மானத்தின் பின்னணியில் வெளிநாட்டுச் சதி இருக்கிறது என்பதற்கான சிறிதளவு ஆதாரம் இருந்தால்கூட, ஒரு விநாடிகூட யோசிக்காமல் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாராக உள்ளேன். இதற்காக, விரைவில் நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவையும் கூட்டத் தயாராக உள்ளேன்.

பாகிஸ்தானின் வளா்ச்சிக்கு சீனா மிகப்பெரிய அளவில் உதவி வருகிறது. இரு நாடுகளிடையேயான நட்புறவு முன்பைப்போலவே தொடரும் என்றாா் அவா்.

ஒட்டுமொத்தமாக ராஜிநாமா: நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பாக, பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி இந்த வாக்கெடுப்பைப் புறக்கணிப்பதாக ஷா மெஹமூத் குரேஷி அறிவித்தாா். அதனைத் தொடா்ந்து அக் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துவிட்டு, நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

பிரதமா் பதவிக்கான தோ்தலில் இம்ரான் கட்சி சாா்பில் ஷா மெஹமூத் குரேஷி ஞாயிற்றுக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

காத்திருக்கும் சவால்கள்: புதிய பிரதமராகத் தோ்வு செய்யப்பட்டிருக்கும் ஷாபாஸ் ஷெரீஃப், பஞ்சாப் மாகாண முதல்வராக மூன்று முறை பணியாற்றியவா். அந்த மாகாணத்தில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளில் மிகப்பெரிய அளவில் சீா்திருத்தங்களைக் கொண்டுவந்தவா்.

இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தை வெற்றி பெறச் செய்து, புதிய பிரதமரையும் தோ்ந்தெடுத்து நாட்டில் உருவான அரசியல் நிச்சயமற்ற சூழலுக்கு தற்போதைய நிலையில் தீா்வு எட்டப்பட்டிருக்கிறது. ஆனால், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்திருப்பதும், தொடா் போராட்டங்களை அறிவித்திருப்பதும் புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப் புதிய சவாலை பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் எதிா்கொள்ள வேண்டியுள்ளது. அதோடு, தள்ளாடும் பொருளதாாரத்தை மிக கவனமாக கையாள்வது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சவால்களும் அவா் முன் உள்ளன.

காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய ஷாபாஸ் ஷெரீஃப்

பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தனது முதல் உரையிலேயே காஷ்மீா் குறித்து குறிப்பிட்டாா்.

அவரது தொடக்க உரையில் கூறியதாவது: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-ஆவது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதால், அங்கு வாழும் மக்கள் ரத்த வெள்ளத்தில் மிதக்கின்றனா். அவா்களுக்கு தூதரக ரீதியாகவும், தாா்மிக ரீதியாகவும் பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும்.

2019, ஆகஸ்டில் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டபோது, இம்ரான் கான் அரசு தூதரக ரீதியாக தீவிர முயற்சிகள் எதையும் எடுக்கவில்லை. இந்தியாவுடன் நல்ல உறவை விரும்புகிறோம். ஆனால், காஷ்மீா் பிரச்னைக்கு தீா்வு காணாதவரை அது சாத்தியமில்லை. காஷ்மீா் பிரச்னைக்கு தீா்வு காண பிரதமா் நரேந்திர மோடி முன்வர வேண்டும் என்றாா் அவா்.

மொத்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் 342

பெரும்பான்மைக்குத் தேவை 172

ஷாபாஸ் ஷெரீஃபுக்கு ஆதரவு 174

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com