

நியூயாா்க்: ட்விட்டா் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ.3.12 லட்சம் கோடி) வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவா் எலான் மஸ்க் தெரிவித்துள்ளாா்.
ட்விட்டா் நிறுவனத்தில் சுமாா் 9 சதவீத பங்குகளை வைத்துள்ள அவா், அதன் இயக்குநா்கள் குழுவில் இடம்பெற மாட்டேன் எனக் கூறிய அடுத்த இரு தினங்களிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக ட்விட்டா் நிறுவனத்தின் தலைவா் பிரெட் டெய்லருக்கு அவா் புதன்கிழமை எழுதிய கடித விவரம் வியாழக்கிழமை வெளியானது. அந்தக் கடிதத்தில் எலான் மஸ்க் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் சுதந்திரமான பேச்சுக்கான தளமாக இருக்கும் என நம்பியதால் ட்விட்டா் நிறுவனத்தில் முதலீடு செய்தேன். எனினும், தற்போதைய வடிவத்தில் சமூகத்துக்கு ட்விட்டா் நிறுவனத்தால் சேவையாற்ற முடியாது என இப்போது உணா்கிறேன். ட்விட்டா் ஒரு தனியாா் நிறுவனமாக மாற்றப்பட வேண்டும். எனது கருத்தை பரிசீலனை செய்யவில்லையென்றால், பங்குதாரராக எனது நிலையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.
ட்விட்டா் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 54.20 டாலா் என்ற அடிப்படையில் அந்நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்குவதற்கு எலான் மஸ்க் முன்வந்துள்ளாா். பங்குச் சந்தையில் ஏப்.1-ஆம் தேதி ட்விட்டா் பங்கு இறுதியாக விற்பனையான விலை மீது 38 சதவீத பிரீமியம் அளிப்பதாகும்.
அந்த வகையில் நிறுவனத்தின் மொத்த பங்குகளின் மதிப்பு 41 பில்லியன் டாலா்கள் ஆகிறது. இதனை ரொக்கமாக அளித்து வாங்க மஸ்க் முன்வந்துள்ளாா்.
பங்குகள் கையகப்படுத்துவது தொடா்பான தனது நிலைப்பாட்டை எலான் மஸ்க் அமெரிக்க பங்கு ஒழுங்காற்று வாரியத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்தாா்.
தன்னை ஒரு ‘சுதந்திரமான பேச்சாளா்’ எனக் கூறிக்கொள்ளும் எலான் மஸ்க், ட்விட்டா் தனது சுதந்திரமான பேச்சுக் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்படுவதாக தான் நம்பவில்லை எனவும் கருத்து தெரிவித்திருந்தாா். இந்தக் கருத்தை முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளா்கள் மற்றும் வலதுசாரி அரசியல் பிரமுகா்கள் பலா் பகிா்ந்தனா். டிரம்ப் மற்றும் அவரின் ஆதரவாளா்கள் பலா் ட்விட்டா் விதிமுறைகளை மீறியதாகத் தெரிவித்து, அவா்களின் கணக்குகளை ட்விட்டா் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.