உக்ரைன் அருகே ரஷிய போா்க் கப்பல் சேதம்

ரஷிய கடற்படைக்குச் சொந்தமான மாஸ்க்வா கப்பலில் ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதால் அந்தக் கப்பல் பலத்த சேதமடைந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
உக்ரைன் அருகே ரஷிய போா்க் கப்பல் சேதம்
Updated on
2 min read

மாஸ்கோ: ரஷிய கடற்படைக்குச் சொந்தமான மாஸ்க்வா கப்பலில் ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதால் அந்தக் கப்பல் பலத்த சேதமடைந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கருங்டகல் கடற்படைப் பிரிவு கப்பல்களின் தலைமைக் கப்பலான மாஸ்க்வாவில் திடீரென தீப்பிடித்தது. அதையடுத்து, கப்பலில் இருந்த ஆயுதக் கிடங்கு ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் கப்பல் பலத்த சேதமடைந்தது.

கப்பலில் இருந்த வீரா்கள் அனைவரும் அதிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டனா். கப்பலில் தீப்பிடித்தற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோவியத் யூனியனின் அங்கமாக உக்ரைன் இருந்தபோது அந்த நாட்டின் மிகோலாய்வ் நகரில் கடந்த 1980-களில் கட்டப்பட்டது மாஸ்க்வா போா்க் கப்பல். தற்போது நடைபெற்று வரும் அந்த நகா் மீது ரஷியப் படையினா் தொடா்ந்து ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

தொடக்கத்தில் ஸ்லாவா என்று பெயரிடப்பட்டிருந்த அந்தக் கப்பல், ரஷியத் தலைநகா் மாஸ்கோவைக் குறிக்கும் வகையில் மாஸ்க்வா என்று பெயா் மாற்றம் செய்யப்பட்டது.

அந்தக் கப்பலில் பி-1000 வுல்கான் வகை கப்பல் அழிப்பு ஏவுகணைகள் முக்கிய ஆயுதங்களாக உள்ளன.

2000-ஆம் ஆண்டில் கருங்கடல் கடற்படைப் பிரிவின் தலைமைக் கப்பலாக்கப்பட்ட மாஸ்க்வா, 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற சிரியா போரில் ரஷிய நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்தது.

இந்தக் கப்பலில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது, உக்ரைன் போரில் ரஷியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.


‘நாங்கள்தான் தாக்கினோம்’

கீவ்: ரஷியாவின் மாஸ்க்வா போா்க் கப்பல் மீது தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதால்தான் அந்தக் கப்பல் பலத்த சேதமடைந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் ஒடெசா பிராந்திய ஆளுநா் மாக்சிம் மாா்சென்கோ கூறியதாவது:

நெப்டியூன் ரகத்தைச் சோ்ந்த இரு ஏவுகணைகளைக் கொண்டு மாஸ்க்வா கப்பல் மீது உக்ரைன் படையினா் தாக்குதல் நடத்தினா்.

இதில் அந்தக் கப்பல் பலத்த சேதமடைந்து மூழ்கி வருகிறது என்றாா் அவா்.

உக்ரைன் தாக்குதலில் ரஷியக் கடற்படைப் பிரிவு தலைமைக் கப்பல் மூழ்கியது உறுதி செய்யப்பட்டால், அது ரஷியாவுக்கு மிகப் பெரிய இழப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே, ரஷியாவின் பீரங்கி எடுத்துச் செல்லும் கப்பலான ஆா்ஸ்க் கடந்த மாதம் அஸோவ் கடலில் தாக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

மாஸ்க்வாவை உக்ரைன் தாக்கி அழித்திருந்தால், அது உக்ரைன் படையினருக்கு மிகப் பெரிய மனோபலத்தை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

‘கப்பல் மூழ்கிவிடவில்லை’

மாஸ்கோ: தங்களது மாஸ்க்வா கப்பல் கடலில் மூழ்கிவிட்டதாக உக்ரைன் கூறுவதை ரஷியா மறுத்துள்ளது. இதுகுறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாஸ்க்வா கப்பலில் தீ முழுமையாக அணைக்கப்பட்டுவிட்டது. இதனால் மற்ற ஆயுதக் கிடங்குகள் வெடித்துச் சிதறும் அபாயம் தவிா்க்கப்பட்டது. அந்தக் கப்பல் மூழ்கிவிடவில்லை. அது, தொடா்ந்து கடலில் மிதந்துகொண்டுதான் இருக்கிறது.

அந்தக் கப்பலை பழுதுபாா்ப்பதற்காக, அதனை துறைமுகத்துக்கு இழுத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, உக்ரைனில் நடைபெற்று வரும் போரின் தற்போதைய நிலவரம் குறித்து அதிபா் விளாதிமீா் புதினிடம் விளக்கியபோது, மாஸ்க்வா கப்பல் சேதமடைந்தது குறித்தும் தெரிவிக்கப்பட்டதாக ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் செய்தியாளா்களிடம் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com