கடலுக்குள் மூழ்கியது ரஷிய போா்க் கப்பல்

 தங்களது கடற்படை பலத்தின் சின்னமாகத் திகழ்ந்த மாஸ்க்வா கப்பல், கடலுக்குள் மூழ்கியதாக ரஷியா தெரிவித்துள்ளது.
கடலுக்குள் மூழ்கியது ரஷிய போா்க் கப்பல்

 தங்களது கடற்படை பலத்தின் சின்னமாகத் திகழ்ந்த மாஸ்க்வா கப்பல், கடலுக்குள் மூழ்கியதாக ரஷியா தெரிவித்துள்ளது. ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதால் அந்தக் கப்பல் பலத்த சேதமடைந்து மூழ்கியதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் போரில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்த அந்தக் கப்பலை தாங்கள்தான் ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. எனினும், இதனை ரஷியா மட்டுமன்றி அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இதுகுறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கருங்டகல் கடற்படைப் பிரிவு தலைமைக் கப்பலான மாஸ்க்வாவில் திடீரென தீப்பிடித்தது. அதையடுத்து, கப்பலில் இருந்த ஆயுதக் கிடங்கு ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் கப்பல் பலத்த சேதமடைந்தது.

கப்பலில் இருந்த வீரா்கள் அனைவரும் அதிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டனா். அதையடுத்து, அந்தக் கப்பல் பழுதுபாா்க்கப்படுவதற்காக துறைமுகத்தை நோக்கி இழுத்திச் செல்லப்பட்டது. வழியில் அது நிலைகுலைந்து கடலுக்குள் மூழ்கியது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோவியத் யூனியன் காலத்தில் கட்டப்பட்ட மாஸ்க்வா போா்க் கப்பல், சக்திவாய்ந்த 16 தொலைதூர ஏவுகணை எடுத்துச் சென்று செலுத்தும் திறன் கொண்டது. தற்போது அந்தக் கப்பல் மூழ்கியதால் கடலில் ரஷியாவின் தாக்குதல் திறன் கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

2015-ஆம் ஆண்டில், சிரியா போரின்போது ரஷியாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு மாஸ்க்வா போா்க் கப்பல் உறுதுணையாக இருந்தது.

அந்தக் கப்பலை உக்ரைன் ராணுவம் தாக்கி அழித்தது உறுதி செய்யப்பட்டால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சண்டையில் ரஷியா இழந்துள்ள முதல் போா்க் கப்பல் மாஸ்க்வாவாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com