சால்மோனெல்லா நோய் என்றால் என்ன? எப்படி பரவும்?

வைரஸ், தொற்று, கிருமி என்பது போல வார்த்தைகளால் பல வாழ்க்கைகள் கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், தற்போது ஒரு பாக்டீரியாவைப் பற்றி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சால்மோனெல்லா நோய் என்றால் என்ன? எப்படி பரவும்?
சால்மோனெல்லா நோய் என்றால் என்ன? எப்படி பரவும்?

வைரஸ், தொற்று, கிருமி என்பது போல வார்த்தைகளால் பல வாழ்க்கைகள் கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், தற்போது ஒரு பாக்டீரியாவைப் பற்றி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது, பிரிட்டனில், நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப் பகுதியில் தொற்றினை ஏற்படுத்தும் சால்மோனெல்லா வகை பாக்டீரியா பரவியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலகின் பல நாடுகளில் 34வது உருமாறிய மோனோபாசிக் சால்மோனெல்லா தைபிமுரியம் பாக்டீரியாவின் தொற்று பரவி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

சால்மோனெல்லா பாக்டீரியா என்றால் என்ன?
சால்மோனெல்லா என்பது ஒரு வகை பாக்டீரியா. இதுவரை 2,500 வகையான சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், மனிதர்களிடையே தொற்றி பாதிப்பினை ஏற்படுத்துவது டைபிமுரியம் மற்றும் என்டெரிடீடிஸ் வகைகள்தான்.

சால்மோனெல்லா பரவினால் என்னவாகும்?
சால்மோனெல்லா பாக்டீரியா ஒருவரது உடலுக்குள் பரவினால், காய்ச்சல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட கோளாறுகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் பொதுவாக சால்மோனெல்லா பாக்டீரியாவைக் கொண்டிருக்கும் உணவை அல்லது குடிநீரை குடித்த 6- 72 மணி நேரத்தில் தெரிய வரும். இந்த நோயின் தாக்கம் 2 - 7 நாள்களுக்கு நீடிக்கும். 

எந்த விதமான சிகிச்சை தேவைப்படும்?
வழக்கமாக லேசான அறிகுறி இருப்பவர்கள் எந்த சிகிச்சையும் இல்லாமலேயே ஒரு சில நாள்களில் குணமடைந்து விடுவார்கள். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது நீர்ச்சத்து குறைந்து அதனால் பாதிப்பு ஏற்படலாம். எனவே நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வதே மிக முக்கிய சிகிச்சையாக உள்ளது.

தற்போது எங்கிருந்து பரவுகிறது?
இந்த தொற்று பரவி வருவதற்கான காரணிகளை ஆராய்ந்த போது, பெல்ஜியம் சாக்லேட்கள் மூலம் இந்த பாக்டீரியா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மிகவும் புகழ்பெற்ற சாக்லேட்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது பெல்ஜியம் சாக்லேட். பெல்ஜியத்திலிருந்து சுமார் 113 நாடுகளுக்கு இந்த சாக்லேட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

இந்த வகை பாக்டீரியா பாதித்தவர்களில் பெரும்பாலானோர் 10 வயதுக்குக் கீழ் உடையவர்கள் என்றும், 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்தமாக பெல்ஜியம் சாக்லேட்டுகள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும்வரை, உலக நாடுகளில் இந்த தொற்று பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக அஞ்சப்படுகிறது.

பெல்ஜியத்தில் உள்ள அர்லோன் நகரில் செயல்பட்டு வரும் சாக்லேட் தொழிற்சாலையின் மோர் கலக்கும் மிகப்பெரிய தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கண்டறியப்பட்ட சால்மோனெல்லா பாக்டீரியாவுடன், தற்போது மனிதர்களிடையே பரவியிருக்கும் பாக்டீரியா மிகச் சரியாக ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com