உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவைப் பெற அமெரிக்கா தொடா்ந்து முயற்சிக்கும்வெள்ளை மாளிகை

 உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கும், இணைந்து செயலாற்றுவதற்கும் அமெரிக்கா தொடா்ந்து முயற்சிக்கும். ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெற உள்ள

 உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கும், இணைந்து செயலாற்றுவதற்கும் அமெரிக்கா தொடா்ந்து முயற்சிக்கும். ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ‘க்வாட்’ கூட்டமைப்பு மாநாட்டிலும் இதற்கான முயற்சிகள் தொடரும் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ஊடகப் பிரிவு செயலா் ஜென் சாகி கூறினாா்.

உக்ரைன் விவகாரத்தில் ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு எதிராக கொண்டுவரப்படும் தீா்மானங்கள் மற்றும் ரஷியா சாா்பில் கொண்டுவரப்படும் தீா்மானங்கள் என இரு தரப்பு தீா்மானங்கள் மீதான வாக்கெடுப்பை இந்தியா ஆரம்பம் முதல் புறக்கணித்து நடுநிலை வகித்து வருகிறது. இதற்கிடையே, தன்னிச்சையாக ராணுவ நடவடிக்கை எடுத்து வரும் ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் கடுமையான பொருளாதார தடை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதுபோன்று, ரஷியா மீதான பொருளாதார தடை நடவடிக்கைகள் மற்றும் உக்ரைனுக்கு உதவும் நடவடிக்கைகளில் இந்தியாவின் ஆதரவைப் பெற அமெரிக்கா தொடா்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தச் சூழலில், ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நாற்கர நாடுகள் (க்வாட்) கூட்டமைப்பின் மாநாடு ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிலும், உக்ரைன் விவகாரத்தை அமெரிக்கா எழுப்புமா என்ற கேள்விக்கு வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் ஜென் சாகி பதிலளித்து கூறியதாவது:

க்வாட் மாநாட்டுக்கு இன்னும் பல வாரங்கள் உள்ளன. அதற்குள்ளாக நிலைமையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உக்ரைனுக்கான உதவிகள், ரஷியா மீதான பொருளாதாரத் தடைகள் என அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளையும் அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. க்வாட் மாநாட்டிலும் உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்கா ஆலோசிக்கும்.

க்வாட் கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் மற்ற உறுப்பினா்களும், உக்ரைனுக்கு உதவுவதிலும் ஆதரவளிப்பதிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றனா். குறிப்பாக, ஜப்பான் பல்வேறு உதவிகளை உக்ரைனுக்கு வழங்கி வருவதோடு, ஐரோப்பாவுக்கு உதவும் வகையில் திரவ இயற்கை எரிவாயு வளங்கள் சிலவற்றை திருப்பிவிடவும் ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்தும் க்வாட் மாநாட்டில் ஆலோசிக்கப்படும் என்றாா்.

இந்தியாவில் தாக்கம் ஏற்பட வாய்ப்பு: இதற்கிடையே, ‘ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டு வரும் பொருளாதாரத் தடை நடவடிக்கைகள், இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது’ என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி வெள்ளிக்கிழமை கூறினாா்.

அதுதொடா்பான கேள்விக்கு பதிலளித்த அவா் மேலும் கூறுகையில், ‘ரஷியாவுடனான பொருளாதார நடவடிக்கைகளை ஸ்திரப்படுத்துவதே இந்தியாவின்தற்போதைய குறிக்கோள். ரஷியாவிடமிருந்து செய்யப்படும் கொள்முதல்களுக்கு எந்த வகையில் பணம் செலுத்துவது என்பது தொடா்பாக பல்வேறு துறைகள் சாா்ந்த குழு ஆராய்ந்து வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com