அல்-ஜவாஹிரியை கண்டுபிடித்தது எப்படி? நாளிதழ் படிக்கும் பழக்கம் காரணமா?

அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது நாளிதழ் படிக்கும் பழக்கமே அவர் இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அல்-ஜவாஹிரியை கண்டுபிடித்தது எப்படி?
அல்-ஜவாஹிரியை கண்டுபிடித்தது எப்படி?

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது நாளிதழ் படிக்கும் பழக்கமே அவர் இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் அறிவித்தார்.

ஆப்கன் தலைநகா் காபூலில் அல்-காய்தா தலைவா் அல்-ஜவாஹிரி (74), ஓா் இல்லத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருந்தாா். அந்த வீட்டைக் கண்டுபிடிக்க அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டது. அதில், அவரது அன்றாட பழக்கவழக்கங்கள் குறித்த விவரங்கள் பெரிதும் உதவியதாக ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அல்-ஜவாஹிரி நாள்தோறும் அதிகாலையில், வீட்டு பால்கனியில் யாரும் இல்லாமல் தனியாக அமர்ந்து நாளிதழ்களைப் படிக்கும் வழக்கம் கொண்டிருந்ததாகக் கிடைத்தத் தகவலையடுத்து, காபூலில் பால்கனி கொண்ட வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

பால்கனி இருக்கும் வீடுகளைக் கண்டறிந்து, பிறகு அதில் அதிகாலையில் நாளிதழ் படிக்கும் நபர்கள் இருக்கிறார்களா என பிரித்து, பிறகு, நாளிதழ் படிக்கும் நபர், வீட்டை விட்டு வெளியேறாதவர் என்ற கோணத்தில் சிஐஏ மிகத் துல்லியமாக அல்-ஜவாஹிரி தங்கியிருந்த அந்த வீட்டைக் கண்டுபிடித்துள்ளது.

அதன்படிதான், காபூலில் அந்த மிகப்பெரிய திட்டம் நிறைவேற்றப்பட்டது. சிஐஏ பறக்கவிட்ட டிரோன் அல்-ஜவாஹிரி இருந்த பால்கனிக்கு அருகேச் சென்றது, அவர் இருப்பதை உறுதி செய்தது. பிறகு இரண்டு ஆண்டுகள் தேடுதல் பணி முடிந்தது.

வழக்கமாக, மிக முக்கிய பயங்கரவாதிகளைத் தேடும்போது, அவர்களது அன்றாட பழக்க வழக்கங்களை அடிப்படையாக வைத்தே, அவர்களைக் கொல்லும் திட்டமே தீட்டப்படும். அந்த வகையில்தான், ஜவாஹிரியின், பால்கனியில் நாளிதழ் படிக்கும் பழக்கம் அவர் இருக்கும் வீட்டைக் கண்டறியவும் அவரைக் கொல்வதற்கான திட்டத்தைத் தீட்டவும் மிகக் கச்சிதமாக அமைந்துள்ளது.

ஏற்கெனவே, அல்-காய்தா அமைப்பை நிறுவிய பின் லேடன் அமெரிக்க சிறப்புப் படையினரால் பாகிஸ்தானில் கந்த 2011-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட நிலையில், தற்போது அல்-ஜவாஹிரியும் கொல்லப்பட்டுள்ளது அந்த அமைப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆப்கன் தலைநகா் காபூலில் அல்-காய்தா தலைவா் அல்-ஜவாஹிரி (74) பதுங்கியிருந்தாா். அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதற்காக, அந்த நகரிலுள்ள ஓா் இல்லத்தில் அவா் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருந்தாா்.

அவரது இருப்பிடத்தை அறிந்து வைத்திருந்த அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ, ஆளில்லா விமானத்திலிருந்து அதிநவீன ஏவுகணை மூலம் சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தி அவரைக் கொன்றது.

நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவா்களுக்கு, அல்-ஜவாஹிரியின் மரணம் மூலம் நீதி கிடைத்துள்ளது. அமெரிக்க மண்ணில் 2,977 உயிா்களை பலி வாங்கிய அந்தத் தாக்குதலில் அவரது பங்கு முக்கியமானது ஆகும்.

அதுமட்டுமன்றி, பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அவா் மூளையாக இருந்து செயல்பட்டாா்.

துல்லியத் தாக்குதல் மூலம் அவரை போா்க்களத்திலிருந்து நிரந்தரமாக அகற்றுவதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தேன் என்றாா் ஜோ பைடன்.

தான் பாதுகாப்பாக தங்கவைப்பட்டிருந்த இல்லத்தின் பால்கனியில் அல்-ஜவாஹிரி நின்றுகொண்டிருந்தபோது, அவா் மீது துல்லியமாகத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இரு ஹெல்ஃபயா் ஆா்9எக்ஸ் ரக ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தாக்குதலின்போது அந்த இல்லத்தில் அல்-ஜவாஹிரியின் உறவினா்கள் இருந்தாலும், அவா்கள் யாரும் காயமடையவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.

கரோனா பாதிப்பால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ள அதிபா் ஜோ பைடனிடம் இந்த தாக்குதல் நடவடிக்கை குறித்த விவரங்கள் உடனுக்குடன் அளிக்கப்பட்டதாக அவா்கள் கூறினா்.

இரட்டை கோபுர தாக்குதல்

4 பயணிகள் விமானங்களைக் கடத்தி, நியூயாா்க் இரட்டை கோபுரத்திலும் அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகனிலும் மோதச் செய்து 19 அல்-காய்தா பயங்கரவாதிகள் கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பா் 11-ஆம் தேதி தாக்குதல் நடத்தினா்.

இதில் கட்டடங்களில் இருந்தவா்கள், பயணிகள் உள்பட 2,977 போ் பலியாகினா்.

இந்தத் தாக்குதலுக்கு அல்-காய்தா தலைவா் பின் லேடனும், இரண்டாம் நிலை தலைவா் அல்-ஜவாஹிரியும் மூளையாக இருந்து செயல்பட்டனா்.

உலகை அதிா்ச்சிக்குள்ளாக்கிய அந்தத் தாக்குதலைத் தொடா்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான போரை அமெரிக்கா தொடங்கியது.

இந்த நிலையில், நீண்ட கால தேடுதல் வேட்டைக்குப் பிறகு பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின் லேடனை அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனா். அதனைத் தொடா்ந்து அல்-காய்தாவின் தலைமைப் பொறுப்பை அல்-ஜவாஹிரி ஏற்றாா்.

தற்போது அவரும் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com