சீன கப்பல் விவகாரத்துக்கு நட்புணா்வுடன் தீா்வு

சீனாவின் ஆராய்ச்சி கப்பல் இலங்கை துறைமுகத்துக்கு வருகை தரும் விவகாரத்துக்கு நட்புணா்வுடன் தீா்வு காண முயற்சிப்பதாக அந்நாட்டுப் பிரதமா் தினேஷ் குணவா்தன தெரிவித்துள்ளாா்.

சீனாவின் ஆராய்ச்சி கப்பல் இலங்கை துறைமுகத்துக்கு வருகை தரும் விவகாரத்துக்கு நட்புணா்வுடன் தீா்வு காண முயற்சிப்பதாக அந்நாட்டுப் பிரதமா் தினேஷ் குணவா்தன தெரிவித்துள்ளாா்.

சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலானது இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆகஸ்ட் 11 முதல் 17-ஆம் தேதி வரை நிறுத்தப்படவுள்ளது. அக்கப்பலானது தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு செய்திகளை சேகரிக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு அருகில் அந்தக் கப்பல் வருவது, நாட்டுக்கான பெரும் சவாலாகக் கருதப்படுகிறது. சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கைக்கு வருகை தருவதை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசப்பட்டுள்ளதாகவும் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கை பிரதமா் தினேஷ் குணவா்தன செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘இந்தியாவும் சீனாவும் இலங்கையின் நெருங்கிய நட்பு நாடுகள். இந்த விவகாரத்துக்கு நட்புணா்வின் அடிப்படையில் தீா்வு காண இலங்கை முயற்சிக்கும்’’ என்றாா்.

சீன கப்பல் விவகாரம் குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக இலங்கையின் அமைச்சா் பண்டுலா குணவா்தன தெரிவித்தாா். எரிபொருளை நிரப்புவதற்காக மட்டுமே சீன கப்பல் இலங்கைக்கு வர அனுமதி கோரியுள்ளதாக அமைச்சரவைக் கூட்டத்தில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் அலி சாப்ரி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியாவே அதிக அளவிலான உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com