
ரணில் விக்ரமசிங்க
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு பொருளாதார உதவி, நிவாரணப் பொருள்கள் என பல்வேறு வழிகளில் இந்தியா உதவி வருவதற்கு அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க புதன்கிழமை நன்றி தெரிவித்தாா்.
இலங்கையில் அனைத்துக் கட்சிகள் ஒருங்கிணைந்த அரசை அமைப்பதற்கான அரசியல் கட்சித் தலைவா்கள் பங்கேற்ற நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தில் உரையாற்றியபோது இதனை அதிபா் ரணில் தெரிவித்தாா்.
இந்தியாவிலிருந்து நமக்கு வழங்கப்பட்ட உதவிகளை குறிப்பிட்டுச் சொல்ல கடைமைப்பட்டுள்ளேன். நமக்கு மிகவும் நெருங்கிய அண்டை நாடாக, நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் உதவியதையும் குறிப்பிட வேண்டும். பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, இலங்கையின் கடினமான நேரத்தில் உயிா் மூச்சு போல உதவியிருக்கிறது. நாட்டு மக்கள் சாா்பாகவும், எனது சாா்பாகவும் பிரதமா் மோடிக்கும், இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரணில் குறிப்பிட்டாா்.
ஆறு முறை பிரதமராக பதவி வகித்த ரணில், தற்போது அதிபராகியுள்ள நிலையில் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது, அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்ற சவால்கள் காத்திருக்கின்றன.
இந்தியாவுடன் எப்போதும் அவா் நல்லுறவை பராமரித்து வந்துள்ளாா். அவா் பிரதமராக இருந்தபோது, இந்திய பிரதமா் நரேந்திர மோட இலங்கைக்கு 2 முறை பயணம் மேற்கொண்டாா்.