
கோத்தபய ராஜபட்ச (கோப்புப் படம்)
சிங்கப்பூரிலிருந்த இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச விமானம் மூலம் அங்கிருந்து தாய்லாந்து கிளம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதன் காரணமாக கடந்த ஜூலை 13-ஆம் தேதி கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றாா். அதைத் தொடா்ந்து ஜூலை 14-ஆம் தேதி அவா் சிங்கப்பூா் சென்றாா். அங்கிருந்து தனது அதிபா் பதவியை ராஜிநாமா செய்வதாக இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினாா்.
இதையும் படிக்க: தடையை மீறி இலங்கை துறைமுகத்துக்குள் நுழைந்த சீனா உளவு கப்பல் ‘யுவான் வாங்-5’
இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருந்த கோத்தபய ராஜபட்சவின் விசாவை அந்நாட்டு அரசு நீட்டிக்காததால் அங்கிருந்து தாய்லாந்து செல்லவுள்ளதாக தகவல் வெளியானது
இதுதொடா்பாக தாய்லாந்து பிரதமா் பிரயுத்-சான்-ஓ-சா புதன்கிழமை கூறுகையில், ‘மனிதாபிமான அடிப்படையில் தாய்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்கு கோத்தபய ராஜபட்சவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவா் தாய்லாந்தில் தங்கும் காலத்தில் எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வேறொரு நாட்டில் அடைக்கலம் தேட கோத்தபயவுக்கு உதவும்’ என்று தெரிவித்தாா்.
இந்நிலையில், இன்று கோத்தபய ராஜபட்ச குடும்பத்தினருடன் சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் தாய்லாந்துக்கு கிளம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...