விமானத்தால் அதிகரிக்கிறதா புவி வெப்பநிலை? வேலையைத் துறந்த விமானி

காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக லண்டன் விமானி ஒருவர் தன்னுடைய வேலையைத் துறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 
விமானத்தால் அதிகரிக்கிறதா புவி வெப்பநிலை? வேலையைத் துறந்த விமானி
Updated on
1 min read

காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக லண்டன் விமானி ஒருவர் தன்னுடைய வேலையைத் துறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதீத மழைப்பொழிவு, வெள்ளம், திடீரென உயரும் வெப்பநிலை  ஆகிய இயற்கை பேரிடர்கள் தொடர்ச்சியாக அதிகரித்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் விமானப் போக்குவரத்து காரணமாக புவி வெப்பநிலை அதிகரிப்பதை அறிந்த விமானி ஒருவர் தன்னுடைய வேலையை ராஜிநாமா செய்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்த டோட் ஸ்மித் எனும் விமானி ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலாத்துறை விமானியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு திடீரென ஏற்பட்ட குடல்வீக்கத்தால் அவதிப்பட்ட ஸ்மித் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தாவர உணவு வகைக்கு மாறினார்.

அதனைத் தொடர்ந்து சூழலியலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ச்சியாக செய்திகளை சேகரித்து படிப்பதில் ஆர்வம் காட்டிய ஸ்மித் அப்போது விமானப் போக்குவரத்து கார்பன் வெளியீட்டில் முக்கியப் பங்காற்றுவதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தனது சக விமானிகளிடம் தனது அச்சத்தைப் பகிர்ந்து கொண்டதுடன் இவற்றுக்கு எதிராக போராட எண்ணி தன்னுடைய பணியை ராஜிநாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக பிரபல செய்தித் தொலைக்காட்சியிடம் பேட்டியளித்துள்ள ஸ்மித், “இந்த அநீதி எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. உலகின் மொத்த கார்பன் வெளியீட்டில் 50 சதவிகிதத்தை மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்தினரே வெளியிடுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கு எதிரான சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க்கின் செயல்பாடுகளால் உந்தப்பட்ட ஸ்மித் தானும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததுடன் காலநிலை மாற்றத்திற்கு எதிரான இயக்கத்தை ஏற்படுத்தி தொடர்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

விமானப் பயன்பாட்டை குறைத்துக் கொள்வதன்மூலம் காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கு உதவ முடியும் எனத் தெரிவித்துவரும் ஸ்மித்தின் செயல்பாடுகளை பலரும் பாராட்டி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com