'இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது'

இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை  கொடுக்காதீர்கள் என உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
'இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது'
'இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது'


புது தில்லி : இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை  கொடுக்காதீர்கள் என உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

நிகழாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘தோ்தலின்போது இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகள் நிதிநிலையை ஆராயாமல், இலவசங்களை விநியோகிக்கும் முறையை ஆய்வு செய்ய நிபுணா் குழுவை ஏற்படுத்த வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டம் 293 (3), (4) ஆகியவற்றுக்கு முரணாக, ஏற்கெனவே மாநில அரசுகளின் கடன் நிலுவையில் உள்ள போதிலும், இலவசங்களை விநியோகிக்க அவை கூடுதலாக கடன்பெறுகின்றன. ஆகையால், கடன் மதிப்பீட்டு முறையை ஏற்படுத்துவது அவசியம்’ என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் வந்த போது, இலவசங்களும் சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.

அப்போது, இலவச வாக்குறுதிகள் தொடர்பான வழிநாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை மறுத்த உச்ச நீதிமன்றம், இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களைக் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது.  இதைக் கொடுங்கள்  இதைக் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட்டால் இந்தியா போன்ற நாட்டில் அதனை செயல்படுத்த முடியாது.

இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல். எனவே,  ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என்பதால் அதனை உச்ச நீதிமன்றம் செய்யாது.

பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில், மக்கள் நலத்திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். மக்கள் நலத்திட்டங்களுக்கும் இலவசங்களுக்கும் வேறுபாடு உள்ளது என்று கூறி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com