'நாய் கூட சாப்பிடாது' தட்டை கையில் ஏந்தியபடி கதறி அழும் காவலர்

காவலர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி தலைமைக் காவலர் ஒருவர் கதறி அழுத விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
தட்டை கையில் ஏந்தியபடி கதறி அழும் காவலர்
தட்டை கையில் ஏந்தியபடி கதறி அழும் காவலர்
Published on
Updated on
1 min read


உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத் பகுதியில் உள்ள காவலர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி தலைமைக் காவலர் ஒருவர் கதறி அழுத விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கண்களில் கண்ணீருடன், கையில் உணவுத் தட்டுடன், உத்தரப் பிரதேச மாநில தலைமைக் காவலர் மனோஜ் குமார் பொதுமக்கள் முன்னிலையில் தனது துயரத்தை வெளிப்படுத்தினார்.

பல முறை தரமற்ற உணவு குறித்து உயரதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லை என்றும், வெந்ததும் வேகாததுமான தோசைக்கல் போன்ற சப்பாத்தியும், அதனை தொட்டுக் கொள்ள ஆறாக ஓடும் தண்ணீர் போல பருப்பும் கொடுப்பதாக அவர் கண்ணீர்விட்டுக் கதறினார்.

அவர் கையில் வைத்திருந்த தட்டில் சில ரொட்டிகளும், கொஞ்சம் அரிசி சாதமும், பருப்பும் இருந்தது. அதனை கையில் வைத்தபடி, சாலையில் போராட்டம் நடத்திய காவலர், "ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள். ஆனால், வேலை முடிந்த பிறகு இந்த ரொட்டிகளைத்தான் காவலர்கள் சாப்பிட வேண்டும். அவ்வளவு ஏன் ஒரு நாய் கூட இந்த ரொட்டிகளை சாப்பிடாது. எங்களால் இந்த உணவை சாப்பிட முடியவில்லை. எங்களது வயிற்றுக்குள் எதுவும் இல்லை என்றால் எப்படித்தான் நாங்கள் வேலை செய்வது? என்று கேட்ட கதறி அழுதார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காவலர்களுக்கு நல்ல தரமான உணவு வழங்கப்படும் என்று உறுதி அளித்தாலும் கூட, இதுபோன்ற உணவுகள்தான் வழங்கப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த மோசடிகள் அனைத்தும் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் டிஎஸ்பிக்களால்தான் நடக்கிறது. இவர்கள் மூலமாக காவலர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுகிறது என்றார் அந்த தலைமைக் காவலர்.

தொடர்ந்து உணவு குறித்து புகார் சொல்லிக் கொண்டிருந்த மனோஜ் குமாரை, அங்கிருந்த சக காவலர்கள் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.