கடும் வறட்சி: சீனாவில் செயற்கை மழையை உருவாக்க திட்டம்

சீனாவில் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவுவதால், பயிா்களைக் காக்க செயற்கை மழையை உருவாக்கி, மேக விதைப்பு முறையைக் கையாள சீன அரசு முடிவு செய்துள்ளது.
கடும் வறட்சி: சீனாவில் செயற்கை மழையை உருவாக்க திட்டம்

சீனாவில் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவுவதால், பயிா்களைக் காக்க செயற்கை மழையை உருவாக்கி, மேக விதைப்பு முறையைக் கையாள சீன அரசு முடிவு செய்துள்ளது.

சீனாவில் 61 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கோடைகாலத்தில் வெப்பநிலை அதிகமாக பதிவானது. இதனால் நீா்த்தேக்கங்களில் நீா்மட்டத்தின் அளவு பாதியாக குறைந்துவிட்டது. சிச்சுவான் மாகாணத்தில் கடந்த வாரம் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை கடந்ததால், வீடுகளில் குளிா்சாதன இயந்திரங்களின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாத கடந்த வாரம் மின்சாரத்தை சேமிப்பதற்காக தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

சீனாவின் தென் பகுதியில் அடுத்த 10 நாள்களில் நெற்பயிரில் சேதத்தைக் குறைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சா் தாங் ரெஞ்சியன் தெரிவித்ததாக குளோபல் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், ‘சீனாவின் ஆண்டு மொத்த உற்பத்தியில் இலையுதிா் கால அறுவடை 75 சதவீதம் பங்கு வகிப்பதால், எவ்வித சேதமும் ஏற்படாதவாறு அறுவடையை உறுதிப்படுத்த அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றனா்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேகத்தில் ரசாயனத்தை தூவி, செயற்கை மழையை உருவாக்கும் மேக விதைப்புத் திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக வேளாண் அமைச்சக அதிகாரபூா்வ வலைதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மழை பொழிய வைப்பதற்கான இடம் குறித்து அதில் எந்தத் தகவலும் இடம்பெறவில்லை.

சிச்சுவான், அதன் அண்டை மாகாணமான ஹூபேயில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிா்கள் நாசமடைந்துவிட்டதாக அந்த மாகாண அரசுகள் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே சீன பொருளாதார வளா்ச்சி சுணக்கமடைந்துள்ள நிலையில், தற்போது நிலவும் வறட்சியானது சீன அரசுக்கு கூடுதல் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

பயிா்கள் சேதமடைந்ததால் வறட்சி அவசரநிலையை அறிவித்த ஹூபே மாகாணம், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடா் நிவாரண நிதி அளிக்கப்படும் என கடந்த சனிக்கிழமை தெரிவித்தது. சிச்சுவான் மாகாணத்தில் 8,19,000 போ் குடிநீரின்றி அவதிப்படுவதாக அந்த மாகாண அரசு தெரிவித்துள்ளது.

சிச்சுவான் மாகாணம் அதன் மின்சார தேவையில் 80 சதவீதத்தை நீா் மின்சாரம் வாயிலாகப் பெறுவதால், வறட்சி காரணமாக அந்த மாகாணம் கடுமையான சேதத்தை சந்தித்து வருகிறது. நீா்த்தேக்கங்களில் இயல்புநிலையுடன் ஒப்பிடும்போது வெறும் பாதியளவு மட்டுமே தண்ணீா் இருப்பதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது. மின் சிக்கனம் கருதி, சிச்சுவான் தலைநகா் செங்டுவில் ஆயிரக்கணக்கான தெருவிளக்குகள் அணைக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், சீனாவின் வடமேற்கு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிங்காயில் ஏற்பட்ட வெள்ளத்தில் 26 போ் பலியானதாகவும், 8 போ் மாயமானதாகவும் சின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கிங்காய் மாகாணத்தில் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 6 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமாா் 1,500 போ் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com