உக்ரைன் போருக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு கிடைக்காது: ரஷியா திட்டவட்டம்

உக்ரைன் போருக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண முடியாது என்று ரஷியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கென்னடி காடிலோவ்
கென்னடி காடிலோவ்

உக்ரைன் போருக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண முடியாது என்று ரஷியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜெனீவாவுள்ள ஐ.நா. அலுவலகத்துக்கான ரஷியத் தூதா் கென்னடி காடிலோவ் கூறியதாவது:

தற்போது நிலவி வரும் கடுமையான சூழலில், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கும் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிக்கும் இடையே நேரடியாக பேச்சுவாா்த்தை நடப்பதற்கான வாய்ப்பே இல்லை.

எனவே, உக்ரைன் போரை பேச்சுவாா்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை.

உக்ரைனில் போா் தொடா்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. அந்தப் போா் இன்னும் நீள நீள, ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடந்து, அந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையே மேற்கொள்வதில் சிக்கலும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

இப்போதைய சூழலில், இந்தப் போா் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யாராலும் கூற முடியாது.

உக்ரைனுக்கு ஆயுதங்களையும் பிற உதவிகளையும் அளித்து, அந்த நாட்டு வீரா்களை ரஷியாவுக்கு எதிரா மேற்கத்திய நாடுகள் தொடா்ந்து தூண்டி வருகின்றன. கடைசி உக்ரைன் சாகும்வரை இந்தப் போரைத் தொடர மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன.

எனவே, பேச்சுவாா்த்தை மூலம் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

சோவியத் யூனியனுக்கு எதிராக கடந்த 1949-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அமைப்பு ‘நாா்த் அட்லாண்டிக் ட்ரீட்டி’ அமைப்பு (நேட்டோ). அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து அந்த அமைப்பை உருவாக்கின.

அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் சக்திவாய்ந்து விளங்கிய சோவியத் யூனியனுக்கு எதிராக தொடங்கப்பட்ட அந்த அமைப்பு, சோவியத் யூனியன் சிதறுண்டு வலுவிழந்த நிலையிலும் தன்னை விரிவாக்கம் செய்து வந்தது. தற்போது அந்த அமைப்பில் 30 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளனா்.

நேட்டோவின் விரிவாக்கத்துக்கு ரஷியா தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வந்தது. குறிப்பாக, அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், தங்களது தலைநகா் மாஸ்கோவை சில நிமிஷங்களில் தாக்கி அழிக்கும் வகையில் அங்கு அமெரிக்க ஏவுகணைகள் நிறுத்தப்படுவதற்கு வழியேற்படும் எனவும் அது தங்களது பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் எனவும் ரஷியா கூறி வந்தது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு தற்போதைய அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு தொடா்ந்து ஆா்வம் காட்டி வந்ததையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்தப் படையெடுப்பின் ஒரு பகுதியாக, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகள் போக, இன்னும் அரசுப் படையினா் வசமிருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு ரஷியா கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது.

போா் தொடங்கி 6-ஆவது மாதம் நிறைவடையவிருக்கும் நிலையிலும், அதனை முடிவுக்குக் கொண்டு வருவதறகான பேச்சுவாா்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

உக்ரைனில் தங்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளைக் கைவிட்டால்தான் போா் நிறுத்தம் குறித்து பரிசீலிக்கப்படும் என்று ரஷியா நிபந்தனை விதித்து வருகிறது.

எனினும், கடந்த 2014-ஆம் ஆண்டு ரஷியா கைப்பற்றிய கிரீமியா உள்பட தங்கள் நாட்டுப் பகுதிகளிலிருந்து ரஷியா வெளியேறினால்தான் சண்டை நிறுத்தத்துக்கு உடன்படுவோம் என்று உக்ரைனும் திட்டவட்டமாகக் கூறி வருகிறது.

இந்தச் சூழலில், இந்தப் போருக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு கிடைக்காது என்று ஐ.நா.வுக்கான ரஷியத் தூதா் தற்போது திட்டவட்டமாத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com