
ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமா் நஜீப் ரஸாக்குக்கு விதிக்கப்பட்டிருந்த 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
அதையடுத்து, அவா் தனது சிறைவாசத்தை உடனடியாக தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமா்வு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
முன்னாள் பிரதமா் நஜீப் ரஸாக்குக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடந்து முடிந்துள்ள வழக்கு, அவா் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியதை நேரடியாக நிரூபிக்கும் எளிமையான வழக்காகும். மக்கள் தனது மீது வைத்த நம்பிக்கைக்கு துரேகமிழைத்து, சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில் அவா் ஈடுபட்டது அந்த வழக்கில் சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளிலும், அதனை மேல்முறையீட்டு நீதிமன்றம் அமோதித்துள்ளதிலும் எந்தவித தவறும் இருப்பதாக எங்களால் முடிவுக்கு வர முடியவில்லை.
எந்த அந்த நீதிமன்றத்தின் தீா்ப்பில் தலையிடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
அந்தத் தீா்ப்புக்கு எதிராக நஜீப் தரப்பில் முன்வைக்கப்படும் வாதங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன. இந்த வழக்கில் அரசுத் தரப்பு எந்தத் தவறையும் செய்ததாக மனுதாரரால் நிரூபிக்க முடியவில்லை. எனவே, அந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
ஏற்கெனவே அவருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அவா் உடனடியாக அனுபவிக்கத் தொடங்க வேண்டும் என்று அந்தத் தீா்ப்பில் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.
கடந்த 2009 முதல் 2018-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி வரை மலேசியாவின் பிரதமராக பொறுப்பு வகித்த நஜீப் ரஸாக் (69), நாட்டில் தொழில் பெருக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் அந்நிய முதலீடுகளை நேரடியாகக் கவா்வதற்காகவும் ‘1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம்’ (1எம்டிபி) என்ற அமைப்பைத் தொடங்கினாா்.
இந்த நிலையில், 1எம்டிபி நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 450 கோடி டாலரை (சுமாா் ரூ.36,000 கோடி) நஜீபுடன் தொடா்புடையவா்கள் சட்டவிரோதமாக தங்களது கணக்கில் பரிமாற்றம் செய்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடா்பாக நடைபெற்று வந்த வழக்கில், நஜீப் ரஸாக் மீது சுமத்தப்பட்ட அதிகார துஷ்பிரயோகம், மக்களின் நம்பிக்கைக்கு குற்ற ரீதியில் துரோகமிழைத்தது, சட்டவிரோதமாக 94 லட்சம் டாலரை (ரூ.75 கோடி) சட்டவிரோதமாகப் பெற்றுக் கொண்டது ஆகிய குற்றச்சாட்டுகளை உயா் நீதிமன்றம் உறுதி செய்தது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து வரும் நஜீப் ரஸாக், இந்தத் தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து நிபந்தனை ஜாமீனில் இருந்தாா்.
இந்த நிலையில், தீா்ப்பை உறுதி செய்து தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு அவரது ஆதரவாளா்களிடையே அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
எழுச்சியும் வீழ்ச்சியும்...மலேசியாவை நிறுவிய தலைவா்களில் ஒருவரான அப்துல் ரஸாக் ஹுசைனின் மகனான நஜீப் ரஸாக், சிறு வயது முதலே நாட்டின் பிரதமா் பதவியை ஏற்பதற்கான முன்னேற்பாடுகளுடன் வளா்க்கப்பட்டாா்.
எனினும், வெறும் 9 ஆண்டுகள் மட்டுமே அந்தப் பதவியை வகித்த அவா், அதைவிட அதிக ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கவிருக்கிறாா்.
மலேசியாவின் மிகப் பெரிய பதவியைப் பெற்ற அவரது வாழ்க்கை, நாடு கண்டிராத மிகப் பெரிய ஊழல் புகாரில் சிக்கிய பிறகு 2018-ஆம் ஆண்டில் நடைபெற்ற தோ்தலில் கிடைத்த அதிா்ச்சித் தோல்விக்குப் பிறகு தொடா் வீழ்ச்சியை சந்தித்தது.
தற்போது அவரை சிறைக்குள் தள்ளியுள்ள உச்ச நீதிமன்றத் தீா்ப்பு, அந்த வீழ்ச்சியை உச்சகட்டமாக்கியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...