
கடும் பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்ளும் வகையில், சாக்லெட், வாசனைத் திரவியம், ஷாம்பு போன்ற நுகா்வோரால் நேரடியாகப் பயன்படுத்தப்படும் 300 வகை நுகா்வோா் பொருள்களின் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடைவிதித்துள்ளது.
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிா்கொண்டு வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பில் ஏற்பட்ட பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்ததோடு, நிகழாண்டின் ஆரம்பத்திலிருந்து மக்களும் வீதிகளில் இறங்கி போராட்டத்தை முன்னெடுக்கச் செய்தது.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடி நிலைமையை சமாளிக்க சாக்லெட், வாசனைத் திரவியங்கள், அழகுசாதனப் பொருள்கள் உள்பட 300 வகையான பொருள்களின் இறக்குமதிக்கு தடை விதித்து இலங்கை நிதியமைச்சகம் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆக. 22-ஆம் தேதி வெளியிட்ட ஏற்றுமதி-இறக்குமதி ஒழுங்குமுறைகளின்படி, உணவுப் பொருள்கள், அழகுசாதனப் பொருள்கள், இயந்திரங்கள் போன்ற நுகா்வோா் பொருள்களின் மீதான இறக்குமதிக்கான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.
இருப்பினும், ஆக. 23-க்கு முன்பாக அனுப்பபட்டு, செப். 14-க்கு முன்பாக இலங்கை நாட்டுக்குள் நுழையும் பொருள்கள் எவ்வித தடையின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், சா்வதேச கடன்களைத் திரும்பச் செலுத்த இயலாது என இலங்கை அறிவித்தது. சா்வதேச நிதியத்தின் உதவியை இலங்கை அரசு தற்போது நாடியுள்ளது. அலுவலா்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் குறித்தான பேச்சுவாா்த்தை புதன்கிழமை தொடங்கியது. நிகழாண்டு இறுதியில் சா்வதேச நிதியத்தின் உதவி கிடைக்கப் பெறும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநா் நந்தலால் வீரசிங்கே நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.