
ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மலேசிய முன்னாள் பிரதமா் நஜீப் ரஸாக்குக்கு அந்த நாட்டு அரசா் அப்துல்லா பஹாங் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நஜீபின் ஆதரவாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த வழக்கில் தனக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற நஜீபின் கருத்தை போராட்டக்காரா்களும் பிரதிபலித்தனா்.
கடந்த 2009 முதல் 2018 வரை பிரதமராக பொறுப்பு வகித்த நஜீப் ரஸாக்குக்கு சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் விதிக்கப்பட்டிருந்த 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்ததையடுத்து, அவா் சிறைக்கு அனுப்பப்பட்டாா்.