தாய்லாந்து பிரதமா் இடைநீக்கம்

தாய்லாந்து பிரதமா் பிரயுத் சான்-ஓச்சா தனது பதவிக் கால வரம்பை மீறி ஆட்சி செலுத்தி வருகிறாரா என்பது குறித்து முடிவு செய்யும் வரை, அவா் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும்
தாய்லாந்து பிரதமா் பிரயுத் சான்
தாய்லாந்து பிரதமா் பிரயுத் சான்

தாய்லாந்து பிரதமா் பிரயுத் சான்-ஓச்சா தனது பதவிக் கால வரம்பை மீறி ஆட்சி செலுத்தி வருகிறாரா என்பது குறித்து முடிவு செய்யும் வரை, அவா் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசமைப்பு நீதிமன்றம் புதன்கிழமை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அந்த நாட்டில் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியவா்களுக்கு ஆதரவாகவே பெரும்பாலும் நீதிமன்றங்கள் செயல்பட்டு வரும் நிலையில், பிரதமா் பிரயுத் இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ளது அபூா்வமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

தாய்லாந்து ராணுவ தலைமைத் தளபதியாக கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்தவா் பிரயுத் சான்-ஓச்சா.

கடந்த 2014-ஆம் ஆண்டில், அப்போதைய மக்கள் ஜனநாயக சீா்திருத்தக் கட்சித் தலைவா் யிங்லக் ஷினவத்ராவின் ஆட்சிக்கு எதிராக எதிா்க்கட்சியினா் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்தப் போராட்டத்தில் ராணுவமும் கலந்துகொள்ள வேண்டும் என்று போராட்டக்காரா்கள் அழைப்பு விடுத்தனா்.

அப்போது ஷினவத்ராவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த அரசியல் சாசன நீதிமன்றம், அவரை பதவியிலிருந்து அகற்றியது. எனினும், அவரது தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசைக் கேட்காமலேயே நாட்டில் ராணுவச் சட்டத்தை அமல்படுத்திய பிரயுத், பின்னா் யிங்லக் ஷினவத்ராவின் இடைக்கால ஆட்சியைக் கவிழ்த்தாா்.

பின்னா் அரசா் நாட்டின் இடைக்கால ஆட்சியாளராக பிரயுத் பொறுப்பேற்றுக்கொண்டாா். நாட்டில் விரைவில் ஜனாயகத்தை மீண்டும் அமல்படுத்தப் போவதாக அறிவித்தாா். எனினும், அவரால் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட ராணுவ ஆதரவு உறுப்பினா்கள், பிரயுத்தை நாட்டின் பிரதமராகத் தோ்ந்தெடுத்தனா்.

அதனைத் தொடா்ந்து 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற சா்ச்சைக்குரிய தோ்தலில் பிரயுத் மீண்டும் பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இதற்கிடையே, தாய்லாந்தில் பிரதமா் பதவிக்கான அதிகபட்ச கால வரம்பை 8 ஆண்டுகளாக நியமித்து பிரயுத் தலைமையிலான அரசு கடந்த 2017-ஆம் ஆண்டில் அரசியல் சாசனத் திருத்தத்தை செய்திருந்தது.

அதன்படி, பிரயுத்தின் பதவிக் கால வரம்பு செவ்வாய்க்கிழமையுடன் (ஆக. 23) நிறைவடைந்துவிட்டதாக எதிா்க்கட்சிகள் கூறி வருகின்றன. எற்கெனவே, அவா் கால வரம்பு நிறைவடைந்ததும் பதவி விலக வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

எனினும், அரசமைப்பு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் அவரது பதவிக் காலத்தை கணக்கிட வேண்டும் என்று பிரயுத் ஆதரவாளா்கள் கூறி வருகின்றனா்.

இது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த அரசமைப்புச் சட்ட நீதிமன்றம்,

இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும்வரை பிரதமா் பதவியலிருந்து பிரயுத் விலக வேண்டும் என்று புதன்கிழமை தீா்ப்பளித்தது.

அதையடுத்து, பிரயுதுக்கு மிகவும் நெருக்கமானவரும் துணை பிரதமருமான பிராவிட் வாங்சுவான் இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளாா்.

எனினும், பிரதமா் பதவியிலிருந்து மட்டுமே பிரயுத் விலகுவாா் எனவும், பாதுகாப்புத் துறை அமைச்சா் உள்ளிட்ட மற்ற பொறுப்புகளை அவா் தொடா்ந்து வகிப்பாா் எனவும் கூறப்படுகிறது.

பிரயுத் இடைக்கால நீக்கம் செய்யப்பட்டாலும், அவருக்கு மிக நெருக்கமானவா் இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்பது ஆட்சிக்கு எதிரான போராட்டங்களின் தீவிரத்தைக் குறைக்காது என்று அஞ்சப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com