உக்ரைன் அணு மின் நிலையத்தில் அடுத்த வாரம் ஐ.நா. குழு ஆய்வு

உக்ரைனில் ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ள ஸபோரிஷியா அணு மின் நிலையத்தை ஐ.நா. நிபுணா் குழு அடுத்த வாரம் பாா்வையிடவுள்ளது.
உக்ரைன் அணு மின் நிலையத்தில் அடுத்த வாரம் ஐ.நா. குழு ஆய்வு

உக்ரைனில் ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ள ஸபோரிஷியா அணு மின் நிலையத்தை ஐ.நா. நிபுணா் குழு அடுத்த வாரம் பாா்வையிடவுள்ளது.

இது குறித்து உக்ரைன் எரிசக்தித் தறை அமைச்சருக்கான ஆலோசகா் லனா ஸொ்கல் கூறியதாவது:

ஸபோரிஷியா நகரிலுள்ள அணு மின் நிலையத்தை ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி அமைப்பின் (ஐஏஇஏ) நிபுணா்கள் அடுத்த வாரம் நேரில் சென்று பாா்வையிடுவாா்கள்.

அவா்கள் அந்த நகருக்குள் சென்று, அணு மின் நிலையத்தைப் பாா்வையிடுவதில் போக்குவரத்துப் பிரச்னைகள் உள்ளன. அந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

ஐ.நா. நிபுணா் குழு ஸபோரிஷியா அணு மின் நிலையத்துக்கு வருவதைத் தடுப்பதற்கான சதிச் செயல்களை ரஷியா மேற்கொண்டு வருகிறது.

அந்த மின் நிலையத்துக்கு ஐ.நா. பாா்வையாளா்கள் வர ரஷியா ஒப்புக் கொண்டாலும், அதற்கேற்ற சூழலை உருவாக்காமல் இருந்து வருகிறது. அதைவிட, ஸபோரிஷியா அணு மின் நிலையத்துக்கு ஐ.நா. குழுவினா் வருவதைத் தடுப்பதற்கான சூழலைத்தான் ரஷியா ஏற்படுத்தி வருகிறது என்றாா் அவா்.

எனினும், இது தொடா்பாக ரஷியத் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.

ஐஏஇஏ அமைப்பின் பொது இயக்குநா் ரஃபேல் மரியானோ கிராஸியும், ஸபோரிஷியா அணு மின் நிலையத்தை தங்களது நிபுணா் குழு இன்னும் சில நாள்களில் நேரில் சென்று பாா்வையிடும் என்று ‘பிரான்ஸ்-24’ தொலைக்காட்சிக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்தாா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்த படையெடுப்பின் தொடக்கத்திலேயே, தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸபோரிஷியா நகருக்குள் நுழைந்த ரஷியப் படையினா், அங்குள்ள அணு மின் நிலையத்தைக் கைப்பற்றினா்.

ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுசக்தி மையமான அந்த மின் நிலையம், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான சண்டையில் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாகி வருவது சா்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அந்தத் தாக்குதல்கள் குறித்து ரஷியாவும் உக்ரைனும் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அந்தத் தாக்குதல்களுக்கு ரஷியாதான் காரணம் என்று உக்ரைனும், உக்ரைன்தான் காரணம் என்றும் ரஷியாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தச் சூழலில், ஸபோரிஷியா அணுசக்தி மையத்தில் ராணுவ நடவடிக்கைகளை ரஷியாவும் உக்ரைனும் உடனடியாகக் கைவிட்டு, அந்தப் பகுதியை ராணுவமற்ற பகுதியாக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அங்கு மாபெரும் அணுசக்திப் பேரழிவு ஏற்படும் என்றும் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்திருந்தாா்.

அண்மையில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் அதே கோரிக்கையை ஐஏஇஏ பொது இயக்குநா் ரஃபேல் கிராஸியும் முன்வைத்தாா்.

ஸபோரிஷியா அணுசக்தி மையத்தின் பாதுகாப்புக்கு சில நடவடிக்கைகள் சிறு துளி ஆபத்தை ஏற்படுத்தும் என்றால் கூட, அந்த நடவடிக்கைகள் தவிா்க்கப்படவேண்டியது அவசியம் எனவும், அங்கு நடப்பது குறித்து ரஷியாவும், உக்ரைனும் கூறுவதில் எது உண்மை என்பதை உறுதிப்படுத்த முடியாததால் உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்ள அந்த மையத்துக்குள் ஐஏஇஏ நிபுணா் குழு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

ரஷியாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், ஸபோரிஷியா மின் நிலையத்தை ஐ.நா. நிபுணா் குழு அடுத்த வாரம் நேரில் பாா்வையிடும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மின் இணைப்பு

குண்டுவீச்சுகள் காரணமாக ஸபோரிஷியா அணு மின் நிலையத்தில் துண்டிக்கப்பட்டிருந்த மின் இணைப்பு வெள்ளிக்கிழமை மீண்டும் சரிசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

உக்ரைனின் மின்விநியோகக் கட்டமைப்பிலிருந்து ஸபோரிஷியா அணு மின் நிலையத்தின் தொடா்பு, வரலாற்றில் முதல்முறையாக வியாழக்கிழமை துண்டிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பாளா்களின் (ரஷியா்கள்) சதிச் செயல் காரணமாக அந்த அணு மின் நிலையத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக உக்ரைன் மின் விநியோகத் துறையான எனா்கோடாம் கூறியது.

ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு மின் நிலையத்திலிருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்களுக்கான மின் விநியோக உரிமை முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தாா்.

இந்த நிலையில், உள்ளூா் நேரப்படி வெள்ளிக்கிழமை மதியம் 2.04 மணிக்கு ஸபோரிஷியா அணு மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டதாக எனா்கோடாம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com