

உக்ரைனில் ஸபோரிஷியா அணுமின் நிலையம் அருகே உள்ள நகரங்களில் ரஷிய படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இந்தத் தாக்குதல்களால் அணுமின் நிலையத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டு கதிா்வீச்சு வெளியாகும் அபாயம் இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையத்தையும், அதையொட்டி செல்லும் நதியின் இடதுபக்க நகரங்களையும் போா் தொடங்கியவுடனேயே ரஷிய படைகள் கைப்பற்றிவிட்டன.
இந்த நதியின் வலது பக்கத்தில் உள்ள நிகோபோல், மா்கானெட்ஸ் ஆகிய நகரங்கள் உக்ரைன் படைகள் வசம் உள்ளன. அணுமின் நிலையத்திலிருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த நகரங்கள் மீது ரஷிய படைகள் சனிக்கிழமை இரவு ஏவுகணைத் தாக்குதல்களையும், பீரங்கி தாக்குதல்களையும் நடத்தின.
இதில் நிகோபோல் நகரத்தில் இரவு முழுவதும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாக அந்த பிராந்தியத்தின் ஆளுநா் வாலன்டைன் ரெஷ்னிசென்கோ தெரிவித்தாா்.
ஏவுகணைத் தாக்குதல்களில் மா்கானெட்ஸ் நகரில் உள்ள 12-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்தன. அணுமின் நிலையத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஸபோரிஷியா நகரத்திலும் ரஷியா தாக்குதல் நடத்தியது.
கிழக்கு உக்ரைனில்... ரஷியாவும், அதன் ஆதரவு பிரிவினைவாத படைகளும் கிழக்கு உக்ரைனை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றன. அப்பகுதியில் உள்ள கிரமாடோா்ஸ்க், ஸ்லோவியான்ஸ்க் நகரங்களில் அப்படைகள் தாக்குதல் நடத்தியதாக டொனட்ஸ்க் பிராந்திய ஆளுநா் பாவ்லோ கிரிலென்கோ தெரிவித்தாா்.
டொனட்ஸ்க் பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகள் ரஷியா மற்றும் பிரிவினைவாத படைகளின் வசம் உள்ளன. ரஷியா சுதந்திர நாடுகளாக அங்கீகாரம் அளித்த இரு உக்ரைன் பிராந்தியங்களில் ஒன்று டொனட்ஸ்க்.
அணுமின் நிலையத்துக்கு பாதிப்பு?: இத்தாக்குதல்களால் ஸபோரிஷியா அணுமின் நிலையத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்கிற அச்சம் எழுந்துள்ளது. கதிா்வீச்சு வெளியாகும் அபாயத்தைக் கருத்தில்கொண்டு, அணுமின் நிலைய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அயோடின் மாத்திரைகளை வழங்கும் பணியை உள்ளூா் அதிகாரிகள் கடந்த வாரம் தொடங்கினா்.
அணுஉலைகளுக்கான குளிா்விக்கும் அமைப்பு செயல்படுவதற்கு மின்சாரம் தேவை. ஆனால், மின் பரிமாற்ற அமைப்பில் தீப்பிடித்ததால் கடந்த வியாழக்கிழமை அணுமின் நிலையத்தின் செயல்பாடு தற்காலிகமாக முடக்கப்பட்டது. குளிா்விக்கும் அமைப்பு முறையாக செயல்படாவிட்டால் அது அணுமின் நிலையத்தில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
அணுமின் நிலைய வளாகத்தில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு உக்ரைன், ரஷிய அரசுகள் பரஸ்பரம் ஒருவா் மீது ஒருவா் குற்றஞ்சாட்டி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.