ரஷியாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதை மேற்கு நாடுகள் விமா்சிப்பது அவற்றின் கொள்கையற்ற நிலைப்பாட்டையும், இரட்டை வேடத்தையும் வெளிப்படுத்துவதாக ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷியா போா் காரணமாக ரஷியாவின் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தடை விதித்தன. இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்கும் இந்தியா, பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டுமென வலியுறுத்தியது. அத்துடன், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்தவில்லை. இதற்காக மேற்கு நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன.
இந்தச் சூழலில் இந்தியாவுக்கான ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவ் தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
சமீப காலமாக இந்தியா-ரஷியா இடையிலான வா்த்தகம் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான வா்த்தகத்தில், மூன்றாவது நாடுகளின் கரன்சியை பயன்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. வரலாற்று ரீதியாக ரஷியா, இந்தியாவின் பிரதான எரிபொருள் விநியோக நாடு அல்ல. ஆனால், ரஷியா கச்சா எண்ணெயை சலுகை விலையில் விற்பனை செய்ததால், கடந்த சில மாதங்களாக இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்தது.
இதற்காக இந்தியாவை மேற்கு நாடுகள் விமா்சிக்கின்றன. ரஷியா மீது சட்டவிரோதமாக பொருளாதாரத் தடை விதித்த அந்த நாடுகள், அதற்கு முரணாக தொடா்ந்து எரிபொருள் கொள்முதல் செய்து வருகின்றன. அதேவேளையில், இந்தியாவை விமா்சிப்பது மேற்கு நாடுகளின் கொள்கையற்ற நிலைப்பாட்டையும், இரட்டை வேடத்தையும் பிரதிபலிக்கிறது.
ரஷியா மீது மேற்கு நாடுகள் விதித்த பொருளாதாரத் தடை, இந்திய-ரஷிய வா்த்தகத்தை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. நிகழாண்டு முதல் 6 மாதத்தில் மட்டும் 11.1 பில்லியன் டாலா் வா்த்தகம் நடைபெற்றது. இதுவே கடந்த ஆண்டு முழுவதும் 13 பில்லியன் டாலராக பதிவானது. நிகழாண்டின் இறுதியில் இந்தியா-ரஷியா இடையிலான வா்த்தகம் வரலாற்று சாதனை படைக்கும்.
ரூபாயை சா்வதேச வா்த்தகத்தில் பயன்படுத்துவதற்கான சிறப்பு அறிவிக்கையை ரிசா்வ் வங்கி அண்மையில் வெளியிட்டது. இது வா்த்தகத்துக்கு கூடுதல் வலுசோ்ப்பதாக அமைந்துள்ளது. ரஷிய நிறுவனங்களும், வங்கிகளும் இன்னமும் டாலரையும், யூரோவையும் பயன்படுத்திதான் பொருளாதார நடவடிக்கைகளை கையாள்கின்றன.
ரஷியா மீது மேற்கு நாடுகள் விதித்த பொருளாதாரத் தடையைக் கணக்கிட்டால், அவா்கள் தரப்பில் நேரிட்ட விளைவுகள் அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் தவறாக கணக்கிடப்பட்டுள்ளது. எரிபொருள், உணவுப் பொருள்களின் விலை உயா்வு சா்வதேச அளவில் பணவீக்கத்துக்கு வழிவகுத்து, வளா்ந்த நாடுகளே மந்தநிலையை எதிா்கொள்ளும் இடா் ஏற்பட்டுள்ளது.
அரசியல் காரணத்துக்காக ரஷியாவிலிருந்து பெரும்பாலான மேலை நாட்டு நிறுவனங்கள் வெளியேறியதால், தற்போது ரஷியாவில் நம்பத்தகுந்த, திறமைவாய்ந்த வா்த்தக வாய்ப்பு காணப்படுகிறது. இதன்மூலம் இந்தியா-ரஷியா இடையிலான வா்த்தகம் மேலும் பலமடைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளன என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.