
கத்தாரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு, மனித உரிமைகள் விவகாரத்தில் அந்த நாட்டுக்கு ஆதரவான கருத்தை பரப்பியதாக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற துணைத் தலைவா் பொறுப்பிலிருந்து கிரீஸ் நாட்டைச் சோ்ந்த எவா காயிலி (படம்) தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக எவா உள்ளிட்ட 4 பேரை பெல்ஜியம் காவல்துறை கைது செய்து, அவா்கள் மீது சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், 16 இடங்களில் போலீஸாா் சோதனை நடத்தி சுமாா் 6 லட்சம் யுரோ (ரூ. 5.2 கோடி) பறிமுதல் செய்துள்ளனா்.
கத்தாரில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளா்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனினும், இந்த விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவான அரசில் முடிவுகளை ஐரோப்பிய யூனியன் எடுப்பதற்கு தனது பணபலத்தை கத்தாா் பயன்படுத்தி வருவதாக நீண்ட காலமாகவே கூறப்பட்டு வந்தது.