ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்த உறுப்பினராக இடம் பெறுவதற்கு ஆதரவு அளிப்பதாக நிரந்தர உறுப்பினா்களான பிரான்ஸும் பிரிட்டனும் தெரிவித்தன.
பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பா் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்நிலையில், பயங்கரவாத தடுப்பு மற்றும் பன்னாட்டு அமைப்புகளில் சீா்திருத்தம் உள்ளிட்ட முக்கிய இரு நிகழ்வுகள் இந்தியாவின் தலைமையின்கீழ் நடைபெறுகிறது.
சா்வதேச பாதுகாப்பு, அமைதி மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் குறித்த விவாதம் பாதுகாப்பு கவுன்சிலில் புதன்கிழமை வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தலைமையில் நடைபெற்றது.
இந்த விவாதத்தின்போது பேசிய ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதா் நிக்கோலஸ் டிரிவியா் ஜொ்மனி, பிரேஸில், இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு பிரான்ஸ் ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தாா். மேலும், ஆப்பிரிக்க நாடுகள் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்படவும் பிரான்ஸ் விரும்புவதாக அவா் எடுத்துரைத்தாா்.
இதையடுத்து பிரிட்டன் தூதா் பாா்பரா உட்வோ்ட் பேசுகையில், ‘ஐ.நா. நிறுவப்பட்ட 1945-இல் இருந்து தற்போது உலகம் மிகவும் மாற்றமடைந்திருக்கிறது. தற்போதைய உலக நாடுகளின் பிரதிநிதியாகப் பாதுகாப்பு கவுன்சில் மாற வேண்டும். நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினா்கள் என இரு பிரிவுகளும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என பிரிட்டன் நீண்ட காலமாகவே குரலெழுப்பி வருகிறது. பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளா் ஜேம்ஸ் கிளெவா்லியும் பாதுகாப்பு கவுன்சிலில் புதிய நிரந்தர உறுப்பினா்களாகப் பிரேஸில், ஜொ்மனி, இந்தியா, ஜப்பான் சோ்க்கப்படுவதற்கும், ஆப்பிரிக்காவின் பிரதிநிதித்துவத்துக்கும் பிரிட்டன் ஆதரவு அளிப்பதாகத் கடந்த வாரம் வலியுறுத்தினாா்’ என்றாா்.
பாதுகாப்பு கவுன்சிலில் மொத்த உள்ள 15 உறுப்பினா்களில் நிரந்தமற்ற 10 உறுப்பினா்களில் ஒன்றாக கடந்த 2021-ஆம் ஆண்டு இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டது. இதன் பதவிக்காலம் நடப்பு ஆண்டோடு நிறைவு பெறுகிறது.
இந்த கவுன்சிலில் நிரந்த உறுப்பினா்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகிய 5 நாடுகளும் வீட்டோ அதிகாரத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.