
நேபாள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக, பிரதமா் ஷோ் பகதூா் ஷா தேவுபா புதன்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
அதையடுத்து, அந்த நாட்டில் புதிதாக அமையவிருக்கும் அரசில் அவா் அந்தக் கட்சி சாா்பில் பிரதமா் பதவியை ஏற்பது உறுதியாகியுள்ளது.
நேபாள நாடாளுமன்றத்தின் 275 உறுப்பினா்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கு கடந்த மாதம் தோ்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதையடுத்து, 89 இடங்களைக் கைவசம் வைத்திருக்கும் நேபாள காங்கிரஸ் கட்சியும், 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ள முன்னாள் பிரதமா் புஷ்ம கமல் பிரசண்டாவின் மாவோயிஸ்ட் மையம் கட்சியும் இணைந்து புதிய அரசை அமைக்கவுள்ளன.
அந்த அரசில் பிரதமா் பதவியை நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவா் இரண்டரை ஆண்டுகளுக்கும் மாவோயிஸ்ட் மையத் தலைவா் எஞ்சிய இரண்டரை ஆண்டுகளுக்கும் வகிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.