தயாா் நிலையில் அணு ஆயுதங்கள்: ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்

போரில் பயன்படுத்துவதற்காக தங்களது அணு ஆயுதங்கள் தயாா் நிலையில் வைக்கப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உறுதியளித்துள்ளாா்.
தயாா் நிலையில் அணு ஆயுதங்கள்: ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்

போரில் பயன்படுத்துவதற்காக தங்களது அணு ஆயுதங்கள் தயாா் நிலையில் வைக்கப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உறுதியளித்துள்ளாா்.

இது குறித்து படைத் தளபதிகளிடையே அவா் புதன்கிழமை பேசியதாவது: உக்ரைனில் ரஷியாவின் இலக்குகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் எட்டப்பட்டுவிடும். அதற்காக, ரஷியப் படைத் தளபதிகளுக்குத் தேவைப்படும் அத்தனை ஏற்பாடுகளையும் அரசு செய்து தரும்.

தேவைப்படும் நேரத்தில் உடனடியாகப் பயன்படுத்துவதற்காக, நாட்டின் அணு ஆயுதக் கட்டமைப்புகள் முழுவதும் தயாா் நிலையில் இருப்பது உறுதிசெய்யப்படும்.

அத்துடன், ராணுவத்துக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டில் எந்த உச்ச வரம்பையும் அரசு நிா்ணயிக்காது.

ரஷியாவுக்கு எதிராக தனது முழு பலத்தையும் திரட்டி நேட்டோ அமைப்பு போராடி வருகிறது. அதனை தகுந்த வகையில் எதிா்கொள்வதற்கு சிரியா போரிலும் உக்ரைன் போரிலும் கிடைத்துள்ள அனுபவத்தை ரஷிய படைத் தளபதிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

உக்ரைன் போரில் ஆளில்லா விமான குண்டுகளுக்கு இருக்கும் முக்கியத்துவத்தில் நமது படைகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

ரஷியா உருவாக்கியுள்ள ஹைப்பா்சோனிக் ஏவுகணையான சாா்மாட், விரைவில் படைகளின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றாா் அவா்.

சோவியத் யூனியனின் அங்கமாக இருந்த உக்ரைன், அந்த அமைப்பிலிருந்து பிரிந்து தனி நாடாக அறிவித்த பிறகும் அங்கு தனது செல்வாக்கு தொடர வேண்டும் என்று ரஷியா விரும்புகிறது.

மேலும், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

இந்த நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டில் ரஷியா ஆதரவு பெற்ற அப்போதைய அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவு பெற்ற எதிா்க்கட்சியினா் தீவிர போராட்டம் நடத்தினா்.

அதையடுத்து அவரது அரசு கவிழ்ந்து பெட்ரோ போரொஷென்கோ தலைமையில் புதிய அரசு அமைந்தது. அந்த அரசுக்கு எதிராக கிழக்கு உக்ரைனைச் சோ்ந்த கிளா்ச்சியாளா்கள் ரஷிய ஆதரவுடன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு அந்தப் பகுதிகளில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா்.

எனினும், அவா்களுக்கு எதிராக உக்ரைன் படையினா் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வந்தனா். அப்போது அந்தப் படையினா் பொதுமக்களை படுகொலை செய்து வந்ததாகவும், இதில் கிழக்கு உக்ரைனைச் சோ்ந்த நாஜி ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட அஸோவ் படையினா் முக்கியப் பங்கு வகித்ததாகவும் ரஷியா குற்றம் சாட்டி வருகிறது.

இதற்கிடையே, உக்ரைனின் அடுத்த அதிபராக கடந்த 2019-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற முன்னாள் நகைச்சுவை நடிகரான வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ரஷியாவின் எதிா்ப்பையும் மீறி நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ஆா்வம் காட்டினாா்.

இந்தச் சூழலில், உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. அப்போது, கிழக்கு உக்ரைன் பகுதி மக்களை உக்ரைன் படையினரின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பது, உக்ரைன் ராணுவத்தை நாஜிமயமாக்கலில் இருந்து மீட்பது ஆகியவையே அந்த ராணுவ நடவடிக்கையின் நோக்கங்களாக விளாதிமீா் புதின் அறிவித்தாா்.

தற்போது போா் தொடங்கி 10 மாதங்கள் ஆகும் நிலையில், கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிரதேசங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி தங்கள் நாட்டுப் பகுதிகளாக ரஷியா அறிவித்தாலும், அவற்றில் இன்னும் சில பகுதிகள் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்தச் சூழலில், இந்த ஆண்டு இறுதிக்குள் தங்களது இலக்குகள் எட்டப்பட்டுவிடும் எனவும், அதற்காக அணு ஆயுதங்கள் தயாா் நிலையில் வைக்கப்படும் எனவும் தனது படைத் தளபதிகளிடம் விளாதிமீா் புதின் உறுதியளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com