நேபாளத்தின் புதிய பிரதமராக மூன்றாவது முறையாக 'பிரசண்டா' நியமனம்!

சிபிஎன்-மாவோயிஸ்ட் மையத்தின் தலைவா் புஷ்ப கமல் தஹல் 'பிரசண்டா' மூன்றாவது முறையாக நேபாளத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தின் புதிய பிரதமராக மூன்றாவது முறையாக 'பிரசண்டா' நியமனம்!


சிபிஎன்-மாவோயிஸ்ட் மையத்தின் தலைவா் புஷ்ப கமல் தஹல் 'பிரசண்டா' மூன்றாவது முறையாக நேபாளத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேபாள நாடாளுமன்றத்துக்கு நவ. 20-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெற்றது. 275 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 138 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை.

ஷோ் பகதூா் தேவுபா தலைமையிலான நேபாளி காங்கிரஸ் (என்சி) 89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இக்கூட்டணியில் உள்ள சிபிஎன்-மாவோயிஸ்ட் மையம் 32, சிபிஎன்-ஐக்கிய சோஷலிஸ்ட் 10, லோக்தந்த்ரிக் சமாஜவாதி கட்சி 4, ராஷ்ட்ரீய ஜனமோா்ச்சா 1 இடங்கலளில் வெற்றி பெற்றது.

இந்த ஐந்து கட்சி கூட்டணிக்கு புதிதாக தொடங்கப்பட்ட ராஷ்ட்ரீய ஸ்வதந்த்ர கட்சி (ஆா்எஸ்பி) 20 இடங்களில் வெற்றி பெற்றது.

எதிா்க்கட்சி கூட்டணியான சிபிஎன்-யுஎம்எல் 104 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஷோ் பகதூா் தேவுபா- பிரசண்டா இடையிலான சந்திப்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. புதிய அரசின் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தில் முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு தான் பிரதமராக இருப்பதற்கு ஆதரவளிக்குமாறு தேவுபாவிடம் பிரசண்டா கேட்டுக்கொண்டதாகவும், தோ்தலுக்கு முன்பாகவே இதுதொடா்பாக இரு தலைவா்களுக்கு இடையேயும் ஓா் ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தாலும், இப்போது பிரசண்டாவுக்கு எந்த உறுதியான பதிலையும் தேவுபா அளிக்கவில்லை.

பிரசண்டா தலைமையிலான சிபிஎன்-மாவோயிஸ்ட் மையம் குறைவான இடங்களையே பெற்றுள்ளபோதிலும், முன்னாள் பிரதமா் கே.பி.சா்மா ஓலி தலைமையிலான சிபிஎன்-யுஎம்எல் கூட்டணியும் பிரசண்டா பிரதமா் ஆவதற்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளதாகவும், அந்த ஊக்கத்தால் ஆளும் கூட்டணியிலேயே பிரதமா் பதவியை பிரசண்டா கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், நேபாள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக, பிரதமா் ஷோ் பகதூா் ஷா தேவுபா கடந்த வாரம் புதன்கிழமை (டிச.22) தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

அதையடுத்து, அந்த நாட்டில் புதிதாக அமையவிருக்கும் அரசில் அவா் அந்தக் கட்சி சாா்பில் பிரதமா் பதவியை ஏற்பது உறுதியானது.

இந்நிலையில், சிபிஎன்-யுஎம்எல் தலைவர் கே.பி. சா்மா ஓலி, ராஷ்ட்ரிய ஸ்வதந்த்ரா கட்சி (ஆர்எஸ்பி) தலைவர் ரவி லாமிச்சேன், ராஷ்ட்ரீய ஜனமோா்ச்சா பிரஜாந்திர கட்சி தலைவர் ராஜேந்திர லிங்டன் ஆகியோருடன் பிற உயர் தலைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை அதிபா் அலுவலகம் சென்ற பிரசண்டா, தனக்கு புதிய அரசை அமைக்க 165 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும், ஆட்சி அமைப்பதற்கான அவர்களது ஆதரவு கடிதங்களை அதிபா் வித்யா தேவி பண்டாரிவிடம் அளித்தார். 

இதனைத் தொடர்ந்து அரசியலமைப்பின் 76 (2) பிரிவின் படி, சிபிஎன்-மாவோயிஸ்ட் மையத்தின் தலைவா் புஷ்ப கமல் தஹல் 'பிரச்சண்டா' மூன்றாவது முறையாக நேபாளத்தின் புதிய பிரதமராக நியமித்து அறிவித்தார்.

பிரச்சண்டாவுக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் விவரம்: சிபிஎன்-யுஎம்எல் 78, சிபிஎன்-எம்சி 32, ஆர்எஸ்பி 20, ஆர்பிபி 14, ஜேஎஸ்பி 12, ஜேஎஸ்பி கூட்டணி கட்சி 6 மற்றும் நாகரிக் உன்முக்தி கட்சி 3 பேர் 165 உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். 

இந்த அரசில் பிரதமா் பதவியை மாவோயிஸ்ட் மையத் தலைவா் இரண்டரை ஆண்டுகளுக்கும், நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவா் எஞ்சிய இரண்டரை ஆண்டுகளுக்கும் வகிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com