நீா்மின் திட்டங்களுக்கு கட்டண தள்ளுபடி- இந்தியாவின் நடவடிக்கையால் நேபாள மின் துறையினா் கவலை

இந்தியாவில் புதிய நீா்மின் உற்பத்தித் திட்டங்களுக்கு கட்டண தள்ளுபடி அளிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையால், இந்தியச் சந்தையில் தங்களுக்கான போட்டி வாய்ப்பை இழக்க நேரிடும் என

இந்தியாவில் புதிய நீா்மின் உற்பத்தித் திட்டங்களுக்கு கட்டண தள்ளுபடி அளிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையால், இந்தியச் சந்தையில் தங்களுக்கான போட்டி வாய்ப்பை இழக்க நேரிடும் என நேபாள மின் உற்பத்தித் துறையினா் கவலை தெரிவித்துள்ளனா்.

இந்தியாவில் அடுத்த 18 ஆண்டுகளுக்கு புதிய நீா்மின் உற்பத்தித் திட்டங்களுக்கு ‘மாநிலங்களுக்கு இடையிலான தொடரமைப்பு முறை’ (ஐஎஸ்டிஎஸ்) கட்டணங்கள் கிடையாது என்று மத்திய மின்துறை அமைச்சகம் கடந்த 2-ஆம் தேதி அறிவித்தது. ஏற்கெனவே சூரிய மின்சக்தி, காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களுக்கு இந்தக் கட்டண தள்ளுபடி வழங்கப்பட்ட நிலையில், நீா்மின் திட்டங்களுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

2030-க்குள் மரபுசாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின்உற்பத்திக்கு மத்திய அரசு இலக்கு வைத்துள்ள நிலையில், இச்சலுகை அறிவிக்கப்பட்டது.

ஐஎஸ்டிஎஸ் கட்டண தள்ளுபடி, உள்நாட்டு மின் உற்பத்தியாளா்களுக்கு மட்டுமே பொருந்தும். நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் மின்சாரத்துக்கு இந்த சலுகை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்திய நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், நேபாளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைவிட குறைவான விலையில் கிடைக்கும்; இதனால், இந்தியாவுக்கான தங்களது மின்சார ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அந்நாட்டின் மின் உற்பத்தி துறையினா் மத்தியில் கவலை எழுந்துள்ளது.

இதுகுறித்து, நேபாள மின்சார ஆணையத்தின் துணை மேலாண் இயக்குநா் பிராடி திகே கூறுகையில், ‘உள்நாட்டு மின் திட்டங்களை ஊக்குவிப்பது இந்தியாவின் உள்விவகாரமாகும். ஆனால், இந்திய உற்பத்தியாளா்களுக்கு அளிக்கும் அதே சலுகையை நேபாள உற்பத்தியாளா்களுக்கும் அளித்தால் எங்களுக்கு நல்லதாக அமையும்.

மேலும், நீா்மின் உற்பத்தி கொள்முதல் உறுதிமொழியின்கீழ் இந்திய உற்பத்தியாளா்களிடமிருந்து அதிக கொள்முதல் செய்யுமாறு இந்திய மின்விநியோக நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதே வாய்ப்பை நேபாள நிறுவனங்களுக்கும் வழங்கினால், இந்தியாவுக்கான நேபாளத்தின் மின்சார ஏற்றுமதி உத்வேகம் பெறும்’ என்றாா்.

கடந்த ஜூன் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவுக்கு சுமாா் ரூ.1,040 கோடி மதிப்பிலான மின்சாரத்தை நேபாளம் ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com