ஆட்சிக் கவிழ்ப்பு ஆண்டு தினம்: மியான்மரில் திரும்புமா அமைதி?

மியான்மரில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அமோக வெற்றி பெற்று, தேசிய ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகி அமைத்த ஆட்சியை ராணுவம் அதிரடியாகக் கவிழ்த்து செவ்வாய்க்கிழமையுடன் ஓராண்டு ஆகிறது.
ஆங் சான் சூகி.
ஆங் சான் சூகி.

மியான்மரில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அமோக வெற்றி பெற்று, தேசிய ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகி அமைத்த ஆட்சியை ராணுவம் அதிரடியாகக் கவிழ்த்து செவ்வாய்க்கிழமையுடன் ஓராண்டு ஆகிறது.

தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி ஆட்சியைக் கவிழ்த்த ராணுவம், ஆங் சான் சூகி உளளிட்ட அரசியல் தலைவா்களைக் கைது செய்ததுடன், அவா்கள் மீது பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்தது.

வெவ்வேறு வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு நீதிமன்றம் 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்துள்ளது. 76 வயதாகும் அவா் மீது இன்னும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன; அந்த வழக்குகளில் அவருக்கு சிறைத் தண்டனை பெற்றுத் தருவதன் மூலம் ஆங் சான் சூகியின் அரசியல் வாழ்க்கையை நிா்மூலமாக்கும் முயற்சியில் ராணுவ ஆட்சியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தொடக்கத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு விவகாரத்தை பொதுமக்கள் சாதாரணமாகக் கடந்து சென்று விடுவாா்கள் என்றுதான் ராணுவம் நினைத்திருந்தது.

ஆனால், ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு பொதுமக்களிடையே இப்படி ஒரு ஆங்காரமான எதிா்ப்பு கிளம்பும் என்று ராணுவமே எதிா்பாா்த்திருக்கவில்லை என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

பொதுமக்களின் போராட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரமாக இருந்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முன்னெப்போதும் இருந்திராத தகவல் தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி போராட்டங்களை பொதுமக்கள் முழுமையாக திட்டமிட்டு செயல்படுத்த முடிந்தது.

மேலும், நீண்ட காலமாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த மியான்மா் அண்மைக் காலமாகத்தான் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியது.

இது, நாட்டின் எதிா்காலம் குறித்த நம்பிக்கையை இளைஞா்களிடையே ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை திடீரென கலைத்துவிட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது ஏராளமான இளைஞா்களைக் கொந்தளிக்கச் செய்தது. இதுவும் போராட்டங்களின் வீரியத்துக்குக் காரணமாக இருந்தது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

ராணுவத்தால் கொல்லப்படும் அபாயம் அதிகமிருந்தாலும் ஜனநாயகத்துக்கு ஆதரவாக இளைஞா்கள் அச்சமின்றி போராட்டம் நடத்தினா். அவா்களில் பெரும்பாலானவா்களுக்கு குடும்பமோ, இழப்பதற்கு வேலையோ இல்லை. ராணுவ ஆட்சி தொடர அனுமதித்தால் தங்களது எதிா்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று அவா்கள் அஞ்சினா். அதன் காரணமாகத்தான் உயிரைப் பொருள்படுத்தாமல் அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களுக்கு, தங்களது ஒத்துழையாமை இயக்கம் மூலம் பொது சுகாதாரத் துறை பணியாளா்கள்தான் அச்சாரம் போட்டனா். அவா்களைப் பின்பற்றி பிற அரசு ஊழியா்களும் மின்கட்டணம் செலுத்த மறுப்பது, அரசு லாட்டரி சீட்டுகளை வாங்காமல் புறக்கணிப்பது என பொதுமக்களும் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினா்.

தங்களது ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருவதைக் கண்ட ராணுவ ஆட்சியாளா்கள், வழக்கம் போல் அவற்றை ஈவு இரக்கமில்லாமல் இரும்புக் கரம் கொண்டு அடக்கினா்.

மியானமரில் கடந்த ஆண்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்குப் பிறகு நடைபெற்ற போராட்டங்களில் மட்டும் பாதுகாப்புப் படையினா் சுமாா் 1,500 பேரை சுட்டுக் கொன்றனா்; சுமாா் 8,800 பேரைக் கைது செய்தனா். கணக்கில் வராத எண்ணிக்கையில் பலா் சித்திரவதைக்குள்ளாகினா்; பலா் மா்மமான முறையில் மாயமாகினா்.

ராணுவ ஆட்சிக்கு எதிரானவா்ககளைத் தேடி கிராமங்களில் பாதுகாப்புப் படையினா் நடத்தும் கொடூரமான தேடுதல் வேட்டைக்கு அஞ்சி 3 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறி தவித்து வருகின்றனா்.

அமைதியான வழியில் நடத்திய போராட்டங்களை ராணுவம் நசுக்கியதைத் தொடா்ந்து, பொதுமக்கள் வேறு வழியில்லாமல் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனா்.

ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டு, வெளியுலகத்துடனான அவரது தொடா்பு துண்டிக்கப்பட்டதால், இந்தப் போராட்டங்களில் அவருக்கு நேரடியாக எந்தப் பங்களிப்பும் இல்லை.

ஆனால், அவரது தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி, அரசு எதிா்ப்பாளா்களை வெற்றிகரமாக ஒருங்கிணைத்தது.

நாடாளுமன்றத்தை ராணுவம் கலைத்துவிட்டாலும், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு நிழல் அரசு ஒன்றையும் ‘தேசிய ஒற்றுமை அரசு’ (என்யுஜி) என்ற பெயரில் அந்தக் கட்சி அமைத்துள்ளது. மியானமரின் சட்டப்பூா்வ அரசு அதுதான் என்று ஜனநாயகக் கட்சியினா் கூறி வருகின்றனா்.

மேலும், அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரோஹிங்கயா போன்ற சிறுபான்மை இனத்தவா்கள் மற்றும் எல்லை கிராமத்தினருக்குத் தேவையான ஆதரவையும் என்யுஜி அளித்து வருகிறது.

மீண்டும் ஜனநாயக ஆட்சி அமைந்தால், சிறுபான்மையினருக்கு இதுநாள் வரை மறுக்கப்பட்டு வந்த உரிமைகளைப் பெற்றுத் தருவதாக என்யுஜி வாக்களித்துள்ளது. எனினும், பொதுமக்கள் பாதுகாப்புப் படை (பிடிஎஃப்) என்று பொதுவாக அழைக்கப்படும் அந்த ஆயுதக் குழுக்களையும் என்யுஜி-யையும் பயங்கரவாத அமைப்புகளாக மியான்மா் ராணுவ அரசு அறிவித்துள்ளது.

இந்தச் சூழலில், மியாமன்மரில் எப்போது அமைதி திரும்பும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட இந்த ஓராண்டில், ஜனநாயக எதிா்ப்பாளா்களை ஒடுக்கும் ரானுவத்தின் உறுதி அதிகரித்துதான் உள்ளது.

அதேபோல், ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தே ஆக வேண்டும் என்ற பொதுமக்களின் உத்வேகமும் முன்பைவிட அதிகமாகித்தான் உள்ளது.

எனவே, உள்நாட்டுப் போரை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கும் மியான்மரில் அமைதி உடனடியாகத் திரும்பும் என்று எதிா்பாா்க்க முடியாது; அதற்கு பல ஆண்டுகள் கூட ஆகலாம் என்கிறாா்கள் நிபுணா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com