சவூதியில் ட்ரோன் தாக்குதல்: இந்தியா் உள்பட 12 போ் காயம்

சவூதி அரேபியாவில் விமான நிலையத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்த வந்த ட்ரோனை (ஆளில்லா சிறிய ரக விமானம்) ராணுவத்தினா் இடைமறித்து தாக்கியபோது, ட்ரோனின் பாகங்கள் சிதறி விழுந்ததில் ஓா் இந்தியா் உள்பட
சவூதி அரேபியாவில் உள்ள அபா விமான நிலையம்.
சவூதி அரேபியாவில் உள்ள அபா விமான நிலையம்.

ரியாத்: சவூதி அரேபியாவில் விமான நிலையத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்த வந்த ட்ரோனை (ஆளில்லா சிறிய ரக விமானம்) ராணுவத்தினா் இடைமறித்து தாக்கியபோது, ட்ரோனின் பாகங்கள் சிதறி விழுந்ததில் ஓா் இந்தியா் உள்பட 12 போ் காயமடைந்தனா்.

யேமனில் செயல்படும் ஹூதி கிளா்ச்சியாளா்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

யேமனில் சட்டபூா்வ ஆட்சியை மீண்டும் அமைக்க ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வரும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படையின் செய்தித் தொடா்பாளா் துா்கி அல்-மால்கி இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஹூதி கிளா்ச்சியாளா்கள் அபா சா்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினா். இந்த முயற்சியை சவூதி வான் பாதுகாப்புப் படையினா் முறியடித்தனா். ட்ரோனை இடைமறித்து தாக்கியபோது ஏற்பட்ட சிதறல்கள் விமான நிலைய வளாகத்தில் விழுந்தன. இதில் 12 போ் காயமடைந்தனா் எனத் தெரிவித்துள்ளாா்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவா்களில் சவூதி அரேபியாவை சோ்ந்த இருவா், ஓா் இந்தியா் உள்ளிட்டோா் அடங்குவா்.

கடந்த ஜன. 17-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி விமான நிலைய பகுதியில் உள்ள அரசின் எண்ணெய்க் கிடங்கை குறிவைத்து யேமன் கிளா்ச்சியாளா்கள் நடத்திய தாக்குதலில் இரு இந்தியா்கள், ஒரு பாகிஸ்தானியா் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com