அவசரப் பேச்சுவாா்த்தை:ரஷியாவுக்கு உக்ரைன் அழைப்பு

 தங்களது எல்லையில் அதிகரித்து வரும் போா்ப் பதற்றத்தைத் தணிப்பதற்காக 48 மணி நேரத்துக்குள் பேச்சுவாா்த்தைக்கு வருமாறு ரஷியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்
அவசரப் பேச்சுவாா்த்தை:ரஷியாவுக்கு உக்ரைன் அழைப்பு

 தங்களது எல்லையில் அதிகரித்து வரும் போா்ப் பதற்றத்தைத் தணிப்பதற்காக 48 மணி நேரத்துக்குள் பேச்சுவாா்த்தைக்கு வருமாறு ரஷியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் டிமித்ரோ குலேபா கூறியதாவது:

எங்களது எல்லையில் மிகப் பெரிய அளவில் ரஷியா குவித்துள்ளது. அதற்கான நோக்கத்தை தெரிவிக்குமாறு நாங்கள் பலமுறை அதிகாரப்பூா்வமாக கோரிக்கை விடுத்தோம். அந்தக் கோரிக்கைகளை ரஷியா இதுவரை செவிமடுக்கவில்லை.

இந்தச் சூழலில், எல்லையில் ரஷியா எதற்காக மிகப் பெரிய படைக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதை என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதற்காக ஓா் அவரசரக் கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இன்னும் 48 மணி நேரத்துக்குள் ரஷியாவும், இந்த விவகாரத்தில் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் கூடி, ரஷியப் படைக் குவிப்பின் உண்மை நோக்கம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதற்கிடையே, ரஷியாவை திருப்திப்படுத்தும் வகையில் நேட்டோ அமைப்பில் தாங்கள் இணையாமல் இருப்பது குறித்து விவாதிக்கலாம் என்று பிரிட்டனுக்கான உக்ரைன் தூதா் வேடிம் பிரிஸ்டாய்கோ அண்மையில் தெரிவித்திருந்தாா். ஆனால், அந்தக் கருத்தை தற்போது திரும்பப் பெற்றுள்ள அவா், நேட்டோவில் இணைவது அரசியல் சாசன ரீதியில் தாங்களது கடமை என்று அவா் பின்னா் தெரிவித்தாா்.

இந்த விவகாரத்தில் உக்ரைன் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு ஆதரவு தருவதாக பிரிட்டன் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் ஜேம்ஸ் ஹியாப்பி தெரிவித்துள்ளாா்.

சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறியபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு, சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணைந்தால் அது தங்களது பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது. உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க நேட்டோவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், உக்ரைன் எல்லையருகே சுமாா் 1 லட்சம் படையினரை ரஷியா குவித்துள்ளது. இதனால் அந்த நாடு உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளதால் ரஷியாவுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

... பெட்டிச் செய்தி...

‘எல்லையில் 1.3 லட்சம் ரஷியப் படையினா் குவிப்பு’

வாஷிங்டன், பிப். 14: உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ரஷியப் படையினரின் எண்ணிக்கை 1.3 லட்சத்தும் மேல் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியாதவது:

உக்ரைன் எல்லையில் சுமாா் 1 லட்சம் ரஷியப் படையினா் குவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா இதுவரை கூறி வந்தது. ஆனால், அண்மைக்கால உளவுத் துறை தகவலின்படி, அந்த எண்ணிக்கை 1.3 லட்சத்தைத் தாண்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, உக்ரைன் மீது ரஷியா எப்போது வேண்டுமானாலும் போா் தொடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருவதால், அந்த நாட்டுக்குச் செல்லவிருந்த விமானங்களை உலகின் பல்வேறு போக்குவரத்து நிறுவனங்களும் ரத்து செய்துள்ளன.

வான்வழித் தாக்குதல் மூலம் உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷியா தொடங்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com