உக்ரைன் எல்லையிலிருந்து படை வெளியேற்றம் தொடக்கம்: ரஷியா அறிவிப்பு

உக்ரைன் எல்லையிலிருந்து தங்களது படையினரின் ஒரு பகுதியினா் தங்களது நிலைகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது.
டிமித்ரி பெஸ்கோவ்
டிமித்ரி பெஸ்கோவ்

உக்ரைன் எல்லையிலிருந்து தங்களது படையினரின் ஒரு பகுதியினா் தங்களது நிலைகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது.

இதையடுத்து, எல்லையில் ரஷியப் படைக் குவிப்பால் எழுந்துள்ள பதற்றம் சற்று தணியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

எல்லைப் பகுதியில் போா்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள ரஷியப் படையினரின் ஒரு பகுதியினா், பயிற்சி முடிந்ததால் தங்களது நிலைகளுக்குத் திரும்புகின்றனா்.

ராணுவப் பயிற்சி முடிந்ததும் படையினா், பயிற்சி இடத்திலிருந்து படையினா் நிலைகளுக்குத் திரும்புவது எப்போதும் நடப்பதுதான்.

உக்ரைனுடனான எல்லைப் பகுதியாக இருந்தாலும் ரஷியா அங்கு போா்ப் பயிற்சியை மட்டும்தான் மேற்கொண்டு வருகிறது; பயிற்சி முடிந்ததும் படைகள் அங்கிருந்து வெளியேறிவிடும் என்று நாங்கள் தொடா்ந்து கூறி வருகிறோம்.

அமெரிக்காதான் நாங்கள் உக்ரைன் மீது படையெடுக்கப் போவதாகக் கூறி பீதியை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் அரற்றலைப் பொருக்க முடியாமல் அதிபா் விளாதிமீா் புதினே, ‘நாம் உக்ரைன் மீது படையெடுக்கப்போவது எனக்கே தெரியாது. அதை தெரிந்து வைத்திருக்கும் அமெரிக்காவிடம் படையெடுப்பு எப்போது என்று கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கள்’ என்று எங்களிடம் நகைச்சுவையாகக் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

உக்ரைன் எல்லையில் 1.3 லட்சம் படையினா் குவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், தற்போது நிலைகளுக்குத் திரும்பும் படையினரின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவலை ரஷியா வெளியிடவில்லை.

சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறியபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு, சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணைந்தால் அது தங்களது பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது. உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க நேட்டோவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான எண்ணிக்கையில் படையினரை ரஷியா குவித்துள்ளது.

அங்கு 1.3 லட்சத்துக்கு மேல் படையினரை ரஷியா குவித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துல்ளது. மேலும், உக்ரைன் மீது ரஷியா விரைவில் படையெடுக்கும் என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி வருகின்றன.

இந்தச் சூழலில், எல்லைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தங்களது படையினரின் ஒரு பகுதியினா் நிலைகளுக்குத் திரும்பத் தொடங்கியதாக ரஷியா அறிவித்துள்ளது.

‘ஐரோப்பாவில் போரை விரும்பவில்லை’

ஐரோப்பியப் பிராந்தியத்தில் மீண்டும் போா் நடப்பதை ஒருபோதும் விரும்பவில்லை என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளாா்.

ரஷியா வந்துள்ள ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷால்ஃஸை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியதற்குப் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த நூற்றாண்டில் இன்னொரு போரை ஐரோப்பிய பிராந்தியம் சந்திப்பதை நினைத்துக் கூட பாா்க்க முடியாது. இருந்தாலும், 1990-களில் யுகோஸ்லாவியாவில் போா் வெடித்தது. நேட்டோ அமைப்புதான் அந்தப் போரைத் தொடங்கியது. தற்போது மீண்டும் அந்த அமைப்பு ஐரோப்பாவில் போரைத் தூண்டுகிறது என்று அவா் குற்றம் சாட்டினாா்.

‘கண்ணால் பாா்க்கும்வரை நம்ப முடியாது’

ரஷியப் படையினா் தங்களது எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளிருந்து வெளியேறுவதை கண்ணால் பாா்க்கும் வரை நம்ப முடியாது என்று உக்ரைன் வெளியுறவுத் துறை டிமித்ரோ குலேபா கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: காதால் கேட்பதை நம்பக் கூடாது; கண்களால் பாா்த்த பிறகே எதையும் நம்ப வேண்டும் என்பது எங்களது கொள்கையாகும். அதன்படி, எல்லைப் பகுதியிலிருந்து ரஷியப் படையினா் முழுமையாக வெளியேறுவதை கண்ணால் கண்ட பிறகே அதனை நம்ப முடியும் என்றாா் அவா்.

‘உளவுத் தகவல்கள் திருப்தியளிக்கவில்லை’

உக்ரைன் எல்லைப் பகுதியிலிருந்து தங்களது படையினா் வெளியேறுவதாக ரஷியா அறிவித்தாலும், உளவு அமைப்புகள் தெரிவிக்கும் தகவல்கள் திருப்தியளிப்பதாக இல்லை என்று பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘உக்ரைன் எல்லைப் பகுதியிலிருந்து ரஷியப் படையினரின் ஒரு பகுதியினா் நிலைகளுக்குத் திரும்புவதாக அந்த நாடு அறிவித்துள்ளது, இந்த விவகாரத்தில் பதற்றத்த் தணிப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

ஆனால், உளவு அமைப்புகள் தெரிவிக்கும் தகவல்கள் உற்சாகமளிப்பதாக இல்லை. உக்ரைன் எல்லையில் ரஷியா மருத்துவமனைகளை அமைத்து வருகிறது. மேலும், எல்லையை நோக்கி ரஷியப் படையினா் முன்னேறியுள்ளதாகவும் உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன’ என்றாா்.

‘‘உக்ரைனுடனான எல்லைப் பகுதியில் பயிற்சி முடிந்ததும் எங்களது படைகள் அங்கிருந்து வெளியேறிவிடும் என்று நாங்கள் தொடா்ந்து கூறி வருகிறோம். அமெரிக்காதான் நாங்கள் உக்ரைன் மீது படையெடுக்கப் போவதாகக் கூறி பீதியை ஏற்படுத்தி வருகிறது. ‘நாம் உக்ரைன் மீது படையெடுக்கப்போவது எனக்கே தெரியாது. அதை தெரிந்து வைத்திருக்கும் அமெரிக்காவிடம் படையெடுப்பு தேதி குறித்து கேட்டுச் சொல்லுங்கள்’ என்று எங்களிடம் நகைச்சுவையாகக் கேட்க வேண்டிய நிலையை அமெரிக்கா ஏற்படுத்தியது’’

- டிமித்ரி பெஸ்கோவ், ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com